கூட்டணிக்கு அழைத்த ஈபிஎஸ்; ‘’ஆட்சியில் பங்கு வேண்டும்’’- செக் வைத்த அன்புமணி!
அன்புமணி ஆட்சியில் பங்கு கேட்டு தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.

பாமக தங்கள் கூட்டணிக்கு வரும் என்று இபிஎஸ் நேற்று வெளிப்படையாகாவே அறிவித்த நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி தமிழகத்தில் ஆளும் அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளது அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், ’’ஓரணியில் தமிழ்நாடு’’ என்ற பிரச்சாரத்தை திமுகவும் ’’மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’’ என்ற பிரச்சாரத்தை அதிமுகவும் தொடங்கியுள்ளது.
பாமக, அதிமுக கூட்டணிக்கு வரும்
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சார சுற்றுப் பயணத்தை அரியலூர் மாவட்டத்தில் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பேசுகையில், “தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை. தேர்தல் நேரத்தில் நீங்கள் எந்தெந்த கட்சிகளுடன் எல்லாம் கூட்டணி வைத்தீர்களோ அதேபோல் நாங்களும் கூட்டணி வைத்தோம். இதில் என்ன தவறு?” என்று ஸ்டாலினை கேள்வி எழுப்பிய இபிஎஸ், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பாமக, அதிமுக கூட்டணிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கூட்டணி ஆட்சி
வெளிப்படையாகவே பாமகவை கூட்டணிக்கு இபிஎஸ் அழைத்த நிலையில், தமிழகத்தில் ஆளும் அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளார். பாமகவின் 37 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அவர் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியிருக்கிறார்.
தமிழக அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லை. ஆனால் , கடந்த ஆண்டு தவெக நடத்திய முதல் மாநாட்டில் எங்களுடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று ஒரே போடாய் போட்டார். அப்போதிலிருந்து இது அரசியல் களத்தில் பேசுபொருளாகி வருகிறது.
அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருக்கும் சூழலில் 2026-ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் என்று பாஜக கூறிவருகிறது. ஆனால் அதிமுகவோ, ’’கூட்டணி ஆட்சியெல்லாம் இல்லை; நாங்கள் தனித்து ஆட்சி அமைப்போம்’’ என்று விடாப்பிடியாக சொல்லி வருகிறது. நேற்று பாமகவை கூட்டணிக்கு இபிஎஸ் வெளிப்படையாகவே அழைத்த நிலையில் இன்று அன்புமணி ஆட்சியில் பங்கு கேட்டு தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.






















