வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா- வெளுத்து வாங்கிய புகழேந்தி!
அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட ஓபிஎஸ், சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

NDA கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் இல்லை என்று அமித் ஷாவே அறிவிப்பார் என்றும் கட்டாயமாக இவர்கள் வெளியேற்றப்படுவார்கள் எனவும் குண்டை தூக்கிப் போட்டுள்ளார் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி.
அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், அதிமுக தொண்டர் மீட்புக் குழு என்ற ஒரு அமைப்பு உருவாக்கி செயல்பட்டு வருகிறார். அதற்கு நிர்வாகிகளையும் அடுத்தடுத்து நியமித்து வருகிறார். இச்சூழலில்தான் ஆளும் திமுக, ’’ஓரணியில் தமிழ்நாடு’’ என்ற பிரச்சாரத்தையும், அதிமுக ’’மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’’ என்ற பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது.
ஓபிஎஸ் என்ன செய்யப்போகிறார்?
விஜயின் தவெகவும் ஆகஸ்ட் மாதம் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ள நிலையில் அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட ஓபிஎஸ், சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே அதிமுக தொண்டர் மீட்புக் குழு சார்பில் செப்டம்பர் 4ஆம் தேதி மதுரையில் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார் ஓபிஎஸ். அப்போது என்டிஏ கூட்டணி தொடர்பான அறிவிப்பையும் ஓபிஎஸ் வெளியிடுவார் என்று சொல்லபடுகிறது.
இச்சூழலில்தான் NDA கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் இல்லை என்றை அமித்ஷாவே அறிவிப்பார் என்று கூறியுள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி.
டிடிவி, ஓபிஎஸ்ஸை அழைக்காத பாஜக
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற அதிமுக - பாஜக கூட்டணி அறிவிப்பின்போதுகூட NDA கூட்டணியில் உள்ள டிடிவி, தினகரன் ஓபிஎஸ் ஆகியோரை பாஜக அழைக்கவில்லை. கூட்டணி தொடர்பான அறிவிப்பின்போதே உங்களை அழைக்கவில்லையே என்று டிடிவி தினகரனிடம் கேட்டபோது நாங்கள் என்டிஏ கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று டிடிவி தினகரன் சொன்னார்.
அதேபோல் ஓபிஎஸ்-ம் அதே பதிலையே தந்தார். அடுத்த முறை மதுரை வந்த அமித்ஷா, அப்போதும் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை. இதனால் என்டிஏ கூட்டணியில் இவர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியை அவர்களது ஆதரவாளர்களே கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
என்டிஏ கூட்டணியே அறிவிக்கும்
இந்த நிலையில், அதிமுகவில் எந்த அணிகளும் இல்லை, அதிமுக இபிஎஸ் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்று பாஜக நினைப்பதாகவும் NDA கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் இல்லை என்று என்டிஏ கூட்டணியே அறிவிக்கும் என்றும் புகழேந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















