’’கூட்டணி ஆட்சியா? இங்க நான் எடுக்கறதுதான் இறுதி முடிவு’’- மீசையை முறுக்கிய ஈபிஎஸ்!
அமித் ஷா கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று சொல்லவில்லை. எங்கள் கூட்டணி, ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார்- எடப்பாடி பழனிசாமி.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் பிரச்சாரத்துக்கான திட்டங்களையும் தீவிரப்படுத்தி உள்ளன. அந்த வகையில், ’’ஓரணியில் தமிழ்நாடு’’ என்ற பிரச்சாரத்தை திமுகவும் ’’மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’’ என்ற பிரச்சாரத்தை அதிமுகவும் தொடங்கியுள்ளன.
பிரச்சார சுற்றுப் பயணம்
அந்த வகையில் ’’மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சார சுற்றுப் பயணத்தை எதிர்க் கட்சித் தலைவர் ஈபிஎஸ் தொடங்கி, நடத்தி வருகிறார்.
இதற்கிடையே சிதம்பரத்தில் செய்தியாளர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 16) பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
’’அமித் ஷா கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று சொல்லவில்லை. எங்கள் கூட்டணி, ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார். கூட்டணியில் நான் எடுப்பதுதான் இறுதி முடிவு. அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.
நல்ல கூட்டணி, தெளிவான கூட்டணி
அதிமுக- பாஜக கூட்டணி, நல்ல கூட்டணி, தெளிவான கூட்டணி. இதைப் பார்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. எங்களுடன் கூட்டணி வைத்தால் மதவாத கட்சி. திமுகவுடன் கூட்டணி வைத்தால் நல்ல கட்சியா. என்ன ஸ்டாலின் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்?’’
இவ்வாறு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன் நியமனம்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்த நிலையில், தனித்து நின்றனர். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி வந்த நிலையில், பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் நியமனம் செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து பாஜக உடனான கூட்டணியை ஈபிஎஸ் இறுதி செய்தார். இதற்கிடையே தமிழ்நாடு வந்த பாஜக மூத்த தலைவர் அமித் ஷா, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று கூறி இருந்தார். எனினும் இது கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றுதான் பொருள் என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






















