Gaza Tragedy: சோகத்திலும் சோகம்; காசாவில் நிவாரண விநியோகத்தின்போது நெரிசலில் 19 பேர் பலி - என்ன கொடுமை இது.?!
சோகத்திலும் சோகம் என்று கூறுவதுபோல், காசாவில் நிவாரணப்பொருள் விநியோகத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்திவரும் நிலையில், காசா முனையில் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொடுமையான சூழலில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிவாரணம் பெற முண்டியடிப்பு - கூட்ட நெரிசலில் 19 பேர் பலி
காசா முனை பகுதியில் இஸ்ரேல் ஆதரவு அமெரிக்க தொண்டு நிறுவனம் ஒன்று, மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, நிவாரணத்தை வாங்க மக்கள் முண்டியடித்து வந்ததால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் சிக்சி 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த கூட்ட நெரிசலின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது, கத்தியால் குத்தப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். இதனால், இந்த சம்பவத்தில் மொத்தம் 20 பேர் பலியாகியுள்ளனர்.
ஹமாஸ் தவறான தகவல்களை பரப்புகிறது - தொண்டு நிறுவனம்
இப்படிப்பட்ட சூழலில், ஹமாஸ் அமைப்பு தவறான தகவல்களை பரப்பி, மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக, அந்த தொண்டு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
நிவாரண விநியோகத்தின் போது வன்முறை ஏற்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ள நிலையில், அதற்கான சான்றுகள் எதையும் ஹமாஸ் அமைப்பு வெளியிடவில்லை என தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நெருக்கடியான சூழலில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள்
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு, காசாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் மிகவும் நெருக்கடியான சூழலில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அங்குள்ள லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருவதாகவும், இப்படிப்பட்ட சூழலில் நிவாரணப் பொருட்கள் வாங்கச் செல்லும்போது கூட, இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்காவதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கானோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
அதன் பிறகு ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தில், பிணைக் கைதிகள் சிலர் மீட்கப்பட்டனர். எனினும், ஏராளமானோர் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளனர்.
அதில் பாதி பேர் தற்போது உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது. இந்நிலையில், காசாவில் உள்ள ஹமாஸ் நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் போரில் இறங்கியது. ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில், காசா பகுதியில் 58,000-த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், லட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், காசா முனையில் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கானோருக்கு, தொண்டு நிறுவனங்கள் சில நிவாரணங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.





















