Cyclone Mandous 'மாண்டஸ் புயலை எதிர்கொள்ள மருத்துவ துறை தயார் நிலையில் உள்ளது’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாண்டஸ் புயல் தொடர்பாக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். புயலால் இன்று நாளை சென்னையில் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளது. மருத்துவம் சார்ந்த துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கு அங்கி அணிவித்தல் மற்றும் தமிழ் மன்றம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். வெள்ளை அங்கி அணிவித்தல் நிகழ்ச்சிக்கு பிறகு, முதலாம் ஆண்டு மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ”தமிழக முதல்வர் பொறுப்பேற்றதிலிருந்தே, கொரோனா நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து மாவட்டங்களுக்கு சுற்று பயணம் செய்து மருத்துவ மேம்பாட்டை உருவாக்கி கட்டுப்படுத்தினார். தமிழகத்தின் இரண்டாவது நகரமான கோவை, மருத்துவ துறையில் சிறந்து விளங்குகின்றது. தனியார் மருத்துவமனையை விட அரசு மருத்துவமனை சிறந்து விளங்குகின்றது. ஏழை எளிய மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், மருத்துவ துறைக்கு தேவையான, 19 ஆயிரம் கோடி நிதியை முதல்வர் ஒதுக்கியுள்ளார். தமிழகம் முழுவதும் தேவையான திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி வருகின்றார். தமிழக முதல்வர் எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்துடன், இல்லம் தோறும் மருத்துவம், வரும்முன் காப்போம் என்று பல்வேறு மருத்துவ திட்டங்களை வழங்கி, இந்தியாவில் உள்ள முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வராக, தமிழக முதல்வர் திகழ்ந்து வருகின்றார்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், “கோவைக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பு ஏற்றவுடன் மற்ற மாவட்டங்களுக்கு எல்லாம் முன் மாதிரியாக கோவையில் செயல்பட்டு வருகிறார். ரேக்கிங் செய்வதில் இருந்து முழுவதும் மாணவர்கள் மன நிலை மாற்றிக் கொண்டார்கள். இங்கு இரண்டாம் 3 ஆம் ஆண்டு மாணவர்கள் வெள்ளை அங்கிகளை கொண்டு வந்து தந்து இளையவர்களை வரவேற்றது சிறப்பு. தொலைபேசி வாயிலாக முதல்வர் மாண்டஸ் புயல் குறித்து செந்தில் பாலாஜி மற்றும் என்னிடம் தொடர்ந்து விசாரித்து கண்கணித்து வருகிறார்.
ஆண்டுக்கு 10825 பேர் தமிழகத்தில் மருத்துவம் படிக்க சேர்க்கப்படுகின்றனர். அதிகமான மருத்துவ கல்லூரியாக உள்ள மாநிலம் தமிழகம் தான். மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெரம்பலூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவமனை அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். 7.5% இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல்வர் மடிக்கணிணி விரைவில் வழங்குவார். மத்திய அரசு பூர்த்தி செய்து வர வேண்டிய 30 இடங்களில் 12 இடங்கள் மட்டுமே பூர்த்தி செய்துள்ளனர். 12 இல் 8 பேர் தமிழக மாணவர்கள். கல்வி திறனில் தமிழக மாணவர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தினமும் 3000 முதல் 5000 பேர் வரை புற நோயாளிகள் கோவை அரசு மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர்.இந்த நிலையில் 5 பணிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வார்டு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பெற மருத்துவ காரணங்கள் வழங்குதல், அறுவை சிகிச்சை அரங்கு, விபத்து மருத்துவ காரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. கோவை மேட்டுப்பாளையத்துக்கு சிடி ஸ்கேன் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்கு 19 வகையான கட்டிடப் பணிகள் மற்றும் மருத்துவ உபகரண பணிகள் நிறைவுற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் தொடர்பாக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். புயலால் இன்று நாளை சென்னையில் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள மருத்துவம் சார்ந்த துறையினர் தயார் நிலையில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.