US Deports Indians: இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா... 205 பேருடன் புறப்பட்ட முதல் விமானம்...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவுப்படி, அமெரிக்காவில் இருந்து 205 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட முதல் ராணுவ விமானம்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், முதற்கட்டமாக 205 இந்தியர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத குடியேற்றம் - ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற உடன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளில், அங்கு சட்டவிரோதமாக குடியேறியுள்ளோர் அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பதும் ஒன்று. அமெரிக்காவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதால், பெரும் பாதிப்புகள் ஏற்படுவதால், அப்படி தங்கியுள்ளோர்களை கண்டுபிடித்து உடனடியாக அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப, அதிகாரிகளுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை கணக்கெடுக்கும் பணி தீவிமாக நடைபெற்று வருகிறது. அதோடு, அவர்களை திருப்பி அனுப்பும் பணிகளும் தொடங்கியுள்ளன.
205 இந்தியர்களுடன் புறப்பட்ட முதல் ராணுவ விமானம்
இந்த நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை முறைப்படி திரும்பப்பெறுவோம் என இந்தியாவும் ஒப்புக்கொண்டது. அதன்படி, தற்போது 205 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் ராணுவ விமானம் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சான் ஆண்டோனியோ மற்றம் டெக்சாஸ் பகுதிகளில் இருந்து, சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள், இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

