அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – காவல்துறைக்கு செம டோஸ் விட்ட சென்னை உயர்நீதிமன்றம்
விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் பத்திரிகையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில், பத்திரிகையாளர்களை துன்புறுத்த கூடாது என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் பத்திரிகையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அவரை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் எஃப்.ஐ.ஆர் லீக் ஆனது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் பத்திரிகையாளர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக காவல்துறை பத்திரிகையாளர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி வருகிறது. அதை ஏற்று பத்திரிகையாளர்களும் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்து வருகின்றனர். அவ்வாறு சென்று வரும் பத்திரிகையாளர்களிடம் இருந்து செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மாணவி வழக்கில் எஃப்.ஐ.ஆர் கசிந்த வழக்கில் பத்திரிகையாளர்களின் செல்போன்களை ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு பத்திரிகையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். பத்திரிகையாளர்களை துண்புறுத்த கூடாது என உத்தரவிட்டார்.
மேலும், ”விசாரணையின் போது குடும்ப விவரங்களை ஏன் கேட்க வேண்டும். முதல் தகவல் அறிக்கையை அப்லோடு செய்தது யார்? பத்திரிகையாளர்களுக்கு மூன்று முறை சம்மன் அனுப்பியது ஏன்? முதல் தகவல் அறிக்கை கசிந்த வழக்கில் பத்திரிகையாளர்களை தவிர வேறு யாரையெல்லாம் விசாரித்தீர்கள். கோட்டூர்புரம் காவல் ஆய்வாளரை விசாரித்தீர்களா? அவரது வாக்குமூலம் எங்கே?” என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.

