ஓடும் ஆட்டோவில் கத்தி முனையில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: சென்னையில் அரங்கேறிய கொடூரம்!
சென்னையில் நாளுக்கு நாள் அரங்கேறும் சம்பவங்கள் மக்கள் மனதில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

சென்னையில் ஓடும் ஆட்டோவில் கத்தி முனையில் 18 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆட்டோ டிரைவரையும் அவரது கூட்டாளிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னையில் நாளுக்கு நாள் அரங்கேறும் சம்பவங்கள் மக்கள் மனதில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தமிழக அரசை எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது பதைபதைக்க வைக்கிறது. மேற்கு வங்காளத்தை பூர்வீகமாக கொண்ட 18 வயது இளம்பெண் ஒருவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகிறார்.
அவர் சென்னை மாதவரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சேலத்தில் இருந்து பேருந்து ஏறியுள்ளார். திங்கட்கிழமை சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
ஆனால் அங்கிருந்து மாதவரம் போக போக்குவரத்து வசதி அந்த நேரத்திற்கு இல்லை எனத் தெரிகிறது. அவள் ஜிஎஸ்டி சாலையில் நடக்கத் தொடங்கினாள், அங்கே ஒரு ஆட்டோ ஓட்டுநர் அவளை மாதவரத்தில் இறக்கிவிட முன்வந்தார்.
சந்தேகமடைந்த அந்த பெண் ஆட்டோவில் ஏற மறுத்து கொஞ்சம் தூரம் நடந்து சென்றுள்ளார். ஆனால் அந்த பெண்ணை தொடர்ந்து சென்ற ஆட்டோ டிரைவர் அவரை மிரட்டி ஆட்டோவில் ஏற்றியுள்ளார்.
சிறிது தூரம் சென்ற பிறகு, அடையாளம் தெரியாத இரண்டு ஆண்கள் அதே ஆட்டோவில் ஏறியுள்ளனர். ஆட்டோ டிரைவரும் கூட்டாளிகளும் சேர்ந்து ஓடும் ஆட்டோவில் கத்தி முனையில் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது அந்த பெண் சத்தம் போட்டதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பந்தப்பட்ட ஆட்டோவை சேஸ் செய்துள்ளனர். இதை சுதாரித்த அந்த நபர்கள் அந்த பெண்ணை நெற்குன்றம் பக்கத்தில் இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரையும் அவரது கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.





















