MTC Driver, Conductor Sacked: சென்னை மாநகரப் பேருந்தில் ஓட்டுநரும், நடத்துநரும் செய்த காரியம்... அவங்க கதி என்ன ஆச்சு தெரியுமா.?
சென்னையில், மாநகரப் பேருந்தில் ஒட்டுநரும், நடத்துநரும் செய்த காரியத்தால், அவர்களுக்கு நேர்ந்த கதி என்ன என்று பார்க்கலாம்.

ஓடும் பேருந்தில் ரீல்ஸ் எடுத்த ஓட்டுநர், நடத்துநர்
சென்னை மாநகரப் பேருந்து ஒன்றில், ஓட்டுநரும், நடத்துநரும், பேருந்து ஓடிக்கொண்டிருந்தபோதே ரீல்ஸ் வீடியோ ஒன்றை எடுத்து, அவர்களது சமூக வலைதள பக்கதில் பகிர்ந்துள்ளனர். நடத்துநர் தனது மொபைல் போனில் காட்சிகளை பதிவு செய்துள்ளார். அப்போது, ஓட்டுநரும் பேருந்தை ஓட்டிக்கொண்டே வீடியோவிற்கு சிரித்தவாறு போஸ் கொடுப்பது பதிவாகியுள்ளது. அதோடு, பயணிகளையும் நடத்துநர் படம்பிடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும் ஆப்பு வைத்துள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஓட்டுநர், நடத்துநர்
ஓடும் பேருந்தில் எடுத்த ரீல்ஸ் வைரலாக, அந்த ஓட்டுநரும், நடத்துநரும் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரும் ஒப்பந்த அடிப்படையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் பணியாற்றிவந்த சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்புகொண்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள், அவர்கள் இருவரையும் பணி நீக்கம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
ஓடும் பேருந்தில் இப்படி ஆபத்தான முறையில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டதால், அந்த வீடியோவே அவர்களின் வேலைக்கு ஆப்பு வைத்துவிட்டது. இனி அவர்களுக்கு ஓட்டுநராகவும், நடத்துநராகவும் எங்கேயாவது பணி கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
இந்த சம்பவத்தை பார்த்தாவது, ரீல்ஸ் வீடியோ எடுப்பவர்கள் இதுபோன்ற ஆபத்தான வீடியோக்கள் பதிவிடுவதை நிறுத்த வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

