Viral Video: உப்புமா வேணாம்; பிரியாணியும் பொரிச்ச கோழியும் வேணும்! பால்வாடி மழலை வீடியோ வைரல்- அமைச்சர் க்யூட் ரிப்ளை!
Viral Video in Tamil: கேரள அங்கன்வாடியில் உப்புமாவை நிறுத்திவிட்டு பிரியாணி போட வேண்டும். கூடவே பொரித்த கோழியும் கொடுக்க வேண்டும்’’ என்று செல்லக் குரலில் கோரிக்கை வைக்கிறான்.

பால்வாடியில் உப்புமாவை ஊட்டும் அன்னையிடம், பிரியாணியும் பொரிச்ச கோழியும் வேண்டும் என்று மழலை கேட்கும் வீடியோ இணையவாசிகள் இடையே கவனமீர்த்து வரும் நிலையில், குழந்தையின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்று வீணா ஜார்ஜ் அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் அங்கன்வாடிகள்
நாடு முழுவதும் மாநிலங்களில் அங்கன்வாடி ஊட்டச்சத்து மையங்கள் செயல்பட்டு வருகிறன. இவை பால்வாடி என்றும் அழைக்கப்படுகிறது. மத்திய மாநில அரசு நிதியுதவியுடன் குழந்தைகளுக்காக இவை செயல்படுகின்றன. 5 வயது வரையிலான குழந்தைகள் இங்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கேரள மாநிலத்திலும் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள தேவிகுளம் கிராமப் பஞ்சாயத்தில் உள்ள அங்கன்வாடி ஒன்றில் மழலை மாறாத சிறுவன் த்ரஜன் (செல்லமாக ஷங்கு), தன் அம்மாவிடம் பேசுகிறான். அதில், ’’அங்கன்வாடியில் உப்புமாவை நிறுத்திவிட்டு பிரியாணி போட வேண்டும். கூடவே பொரித்த கோழியும் கொடுக்க வேண்டும்’’ என்று செல்லக் குரலில் கோரிக்கை வைக்கிறான்.
இந்த வீடியோவை ஷங்குவின் அம்மா எடுத்து, பொது வெளியில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணைய வெளியில் வைரலானது.
த்ரஜன் வைத்த கோரிக்கை குறித்து அரசு பரிசீலனை செய்யும்
இதைப் பார்த்த கேரள மாநில சுகாதார மற்றும் பெண்கள் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், ’’ஷங்கு என்ற த்ரஜன் வைத்த கோரிக்கை குறித்து அரசு பரிசீலனை செய்யும். ஏற்கெனவே நம் அங்கன்வாடிகளில் முட்டையும் பாலும் வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருகிறது. மகன் ஷங்கு கேட்ட பிரியாணி கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்பட்டு, அறிவிக்கப்படும்’’ என்று புன்னகை மாறாமல் அமைச்சர் பதில் அளித்துள்ளார்.






















