(Source: ECI/ABP News/ABP Majha)
ஓணம் பண்டிகைக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை இல்லையா ?
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து துறை அலுவலகம் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை முன்னிட்டு நாளை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை கிடையாது என்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை (08.09.2022) ஓணம் பண்டிகையினை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படவில்லை. எனவே, அனைத்து துறை அலுவலகங்களும். நாளை (08.09.2022) வழக்கம் போல் செயல்படும் என்பதால் அனைத்து துறை/சார்நிலை அலுவலர்களும் தவறாமல் அலுவலகத்திற்கு வருகை புரிய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஓணம் பண்டிகை ஒட்டி நாளை பள்ளிகள் விடுமுறை என தகவல் பரவி வந்த நிலையில், நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட சுற்றறிக்கை
செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலகில் பணிபுரிந்து வரும், அனைத்து தறை அலுவலர்களும் / பணியாளர்களும் நாளை 08.09.2022 ஓணம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படவில்லை என்பதால் ( Working Day ) அனைத்து சார்நிலை அலுவலர்களும் தங்களது அலுவலகத்திற்கு பணிக்கு வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஓணம் திருநாள் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மலையாள மண்ணின் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடும் பண்பாட்டுப் பெருவிழாவான திருவோணம் நாளை (செப்டம்பர்-8) கொண்டாடப்பட இருக்கிறது. நல்லரசு புரியும் வேந்தனை வஞ்சகத்தால் வீழ்த்தினாலும், வரலாற்றிலும் மக்கள் மனங்களிலும் அவன் புகழ் என்றும் மறையாது என்பதை இன்றளவும் எடுத்துக்காட்டும் நாள் ஓணம் திருநாள்.அத்தப்பூ கோலமிட்டு, பட்டாடையும் புத்தாடையும் உடுத்தி, அறுசுவை உணவருந்திச் சேர நாட்டவர் கொண்டாடும் அறுவடைத் திருவிழா ஓணம். 'மாயோன் மேய ஓண நன்னாள்' எனச் சங்க இலக்கியமாம் மதுரைக் காஞ்சியிலும் குறிப்பிடப்படும் இத்திருநாள் திராவிட நிலத்தின் தொன்மையையும் நம்மிடையேயான பண்பாட்டு உறவையும் காட்டும் விழா. கேரள மக்கள் அனைவரும் சாதி, மதம் கடந்து அனைவரும் ஒண்றிணைந்து கொண்டாடி ஒற்றுமையின் சிறப்பை உணர்த்தும் சமூக நல்லிணக்க விழாவாக ஓணம் இருக்கிறது. அத்தகைய திருநாளைத் தமிழ்நாட்டில் உள்ள மலையாளி உடன்பிறப்புகளும் ஏற்றத்துடன் கொண்டாடுவதற்கேற்ப, இங்குள்ள எல்லையோர மாவட்டங்களிலும் சென்னையிலும் அரசு விடுமுறை அளித்தது திமுக அரசு என்பதை இத்தருணத்தில் நினைவுகூர்ந்து, உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்குத் தமிழ்நாட்டின் சார்பாக எனது ஓணத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பும் ஒற்றுமையும் சமத்துவமும் சகோதர உணர்வுமே நம் வலிமை என்பதைப் பறைசாற்றுவதாக இத்தகைய பண்பாட்டுத் திருவிழாக்கள் அமையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்