CBE Bomb Blast: கோவை தொடர் குண்டுவெடிப்பு; 28 ஆண்டுகளுக்குப் பின் முக்கிய குற்றவாளி சாதிக் ராஜா கைது
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றாவளியான சாதிக் ராஜா (எ) டெய்லர் ராஜா, 28 ஆண்டுகளுக்குப்பின் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சாதிக் ராஜா என்ற டெய்லர் ராஜாவை, சத்தீஸ்கர் மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். 1998-ல் கோவையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில், 58 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சாதிக் தான் தற்போது சத்தீஸ்கரில் கைதாகியுள்ளார்.
கோவை தொடர் குண்டுவெடிப்பு
கோயம்புத்தூரில், கடந்த 1998-ம் ஆண்டு, பிப்ரவரி 14-ம் தேதி, தேர்தல் பிரசாரத்திற்கு வந்த பாஜக தலைவர் எல்.கே. அத்வானியை கொலை செய்யும் முயற்சியாக, அல் உமா பயங்கரவாத அமைப்பினர், 18 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர்.
இந்த குண்டுவெடிப்புகளில் 58 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தொடர் குண்டீவெடிப்பு வழக்கில், அல் உமா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தலைமறைவான முக்கிய குற்றவாளி தற்போது கைது
இந்த குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான டெய்லர் ராஜா என்பவர் தலைமறைவானதாக கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த 28 ஆண்டுகளாக தலைமறைவாக பதுங்கியிருந்த சாதிக் ராஜா என்கிற டெய்லர் ராஜாவை, சத்தீஸ்கர் மாநிலத்தில், தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து, சாதிக் ராஜாவை பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வருகின்றனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், அனைத்து காவலர்களும் பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






















