ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் என்றாலே கெத்துதான்... உற்சாகமாக பேசிய முதல்வர் ஸ்டாலின்
உங்களைப் போன்ற இளம் மாணவர்களை சந்திக்கும் பொழுது எனக்கும் எனர்ஜி வந்து விடுகிறது. திருவாரூர் பயணத்திற்கு நடுவில் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

தஞ்சாவூர்: ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் என்று கூறுவது கெத்து. உங்களைப் போன்ற இளம் மாணவர்களை சந்திக்கும் பொழுது எனக்கும் எனர்ஜி வந்து விடுகிறது என்று உற்சாகமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்த புதிய கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: முதலமைச்சராக நான் பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து பயணங்கள் செய்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். அது மட்டுமல்ல ஆய்வு கூட்டம், அரசு பணி என்று தொடர்ந்து பிசியாக இருந்தாலும் உங்களைப் போன்ற இளம் மாணவர்களை சந்திக்கும் பொழுது எனக்கும் எனர்ஜி வந்து விடுகிறது. அதுவும் மாணவர்கள் அதிகம் உள்ள நிகழ்ச்சி என்பதால் எனக்கு மிகுந்த ஆர்வம். திருவாரூர் பயணத்திற்கு நடுவில் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.
இந்த கல்லூரிக்கு நான் வருவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே 2006ல் கல்லூரி நிறுவனர் நாள் விழாவிற்கு வந்துள்ளேன். அடுத்து இந்த புதிய கட்டிடத்திற்கு அடிக்கலை வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டேன். மேலும் கடந்த மே மாதம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டிலும் வந்து கலந்து கொண்டேன். ஒற்றுமையும், சகோதரத்துவம் எப்படி வலுப்பட வேண்டும் என்று வழிகாட்டு நிறுவனமாக இந்தக் கல்லூரி உள்ளது. இங்கு உங்களுக்குள் ஏற்படும் நட்பு அனைத்து காலத்திற்கும் தொடர வேண்டும். கல்லூரி நட்பு வயதாகும் வரை உறுதியாக இருக்க வேண்டும். அது சமூகத்திலும் எதிரொலிக்க வேண்டும்.
ஏனென்றால் இந்த கல்லூரியை உருவாக்கிய ஹாஜி ஜமால் முகமது சாஹிப், கஜா மியான் ரௌதர் இப்படிப்பட்ட நல்லிணக்கத்தை உருவாக்கி இந்தப் பகுதியில் இந்து, கிறிஸ்து, முஸ்லிம் மக்கள் அனைவரும் படித்து முன்னேற வேண்டும் என நினைத்தனர். அது நினைவாகி உங்கள் கல்வி கனவையும் 75 ஆண்டுகளையும் நினைவாக்கி வருகிறது. இந்த கல்லூரி நிறுவனர்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
நிறுவனர் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் தலைமையில் போராடியவர். 1931இல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர். காந்தியடிகளிடம் ஒரு பிளாங் செக்கை கொடுத்து அதில் எவ்வளவு தொகை வேண்டுமென்றாலும் நிரப்பி கொண்டு அதை விடுதலைப் போராட்ட நிதியாக வைத்துக்கொண்டு கொள்ளுங்கள் என்று கூறிய வள்ளல்தான் கதர் துணி ஆலை நடத்தி அந்த துணிகளை மக்களுக்கு இலவசமாக வழங்கியவர். இரண்டு வள்ளல்களும் காந்தியடிகள் வழியை பின்பற்றியவர்கள் . காந்தி, அம்பேத்கர், பெரியார் வழி என நமக்காக வழிகள் உள்ளன. மாணவர்கள் ஆகிய நீங்கள் எப்பொழுதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்று விடக்கூடாது.
கல்லூரி நிறுவனர் தந்தை பெரியாரிடம் பாசம் கொண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தன் மனைவியுடன் கலந்து கொண்டவர். அப்படிப்பட்டவர் 100 ஏக்கர் நிலத்தில் கட்டிக் கொடுத்த கட்டிடத்தில் தான் இன்று இந்த கல்லூரி தொடங்கப்பட்டது. இரு வள்ளல்களும் உருவாக்கி தந்துள்ள இந்த கல்லூரியில் 75 ஆண்டுகளில் பல்வேறு தரப்பினரும் மதிப்பு மிக்கவர்களாக உருவாகியுள்ளனர். அன்றிலிருந்து இன்று வரை இந்த கல்லூரி அதே கொள்கையில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தக் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், அனைவர் நான் பாராட்டுகிறேன். அதேபோல உயர்ந்த சிந்தனை கொண்டவர்களின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்துபவர்கள் மாணவர்களாக நீங்கள் தான்.
அதுதான் உங்களின் நிலையான சொத்து. சமூக அக்கறை, பல்வேறு திறமைகளை கொண்டவர்களாக நிறைந்து வருகிறீர்கள் அதனால் தான் உங்களை தேடி தங்க பதக்கங்கள் வந்து கொண்டிருக்கிறது. மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கிடைத்துள்ளது. இப்படி சாதனைகள் படைப்பதால் தான் 2013இல் மற்றும் 2016 இல் யூசிஜி இந்த கல்லூரிக்கு கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 3 கோடியை ஒதுக்கியது இது கல்லூரி நிர்வாகத்திற்கு மட்டுமல்ல உங்களுக்கும்தான் பெருமை. நீங்கள் ரயில், பஸ்களில் பயணம் செய்யும்போது பக்கத்தில் உள்ளவர்கள் எந்த காலேஜை சேர்ந்தவர் எனக் கேட்டால் ஜமால் முகமது காலேஜ் என்று சொல்வார்கள். நானும் அதே காலேஜை சேர்ந்தது தான் கூறுவது மாணவர்களுக்கு பெருமிதம் வருகிறது. அதுதான் இந்த காலேஜின் கெத்து.
இங்கு படித்த மாணவர்கள் பல்வேறு துறைகளிலும் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளனர். முன்னாள் மாணவர்கள் லிஸ்டில் நீதிபதிகள் கூட உள்ளனர். ஏன் தமிழ்நாடு அமைச்சர்கள் ரெண்டு பேர் உள்ளனர். அப்படி இந்த கல்லூரி கொடுத்த பேராசிரியர் ஐயா காதர் மொய்தீன் அவர்கள் கண்ணியத்துக்குரிய வழியில் வந்து சமுதாய தொண்டு ஆற்றி இன்று தகைசால் தமிழராக உயர்ந்து நிற்கிறார். நல்லிணக்க உள்ளமும் நாட்டு நலன் சார்ந்த சிந்தனையும் கொண்ட அவருக்கு ஆகஸ்ட் 15-ல் தகைசால் தமிழர் விருது வழங்குவதில் நானும், தமிழ்நாடு அரசும் பெருமை அடைகிறோம். ஏன் நீங்களும் தான் பெருமை அடைந்து கொண்டிருக்கிறீர்கள். திராவிட மாடல அரசை பொருத்தவரைக்கும் தமிழ்நாட்டில் மக்களின் வளர்ச்சி தான் முக்கியம். அந்த வளர்ச்சிக்கு அடித்தளமாக நாம் நினைக்கிறது அறிவு செல்வம். அதனால் கல்விக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்து ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம்.
இங்கு ஏராளமான மாணவர்கள் இருக்கிறீர்கள். நமது அரசு செய்து கொண்டுள்ள சாதனைகள் அனைத்தும் உங்களுக்கு நன்கு தெரியும். உங்கள் திறன் மேம்பாட்டிற்கு துணை நின்று, பல்வேறு உயர் பதவிகளில் மாணவர்கள் அமர்வதை செயல்படுத்தும் திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். கல்விக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என மாணவ, மாணவிகளுக்கு துணையாக மாதம் ஆயிரம் ரூபாய், ஆண்டிற்கு ரூ. 12 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம்.
அதுமட்டுமல்ல கல்லூரி கனவு வெற்றி வெற்றி என பல்வேறு திட்டங்கள் மூலமாக தமிழ் சமூகத்தை அறிவு சமூகமாக வளர்த்தெடுக்கிறோம். புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறோம். அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி இளைஞர்கள் நீங்கள் ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். எப்பவும் இளைஞர்களுக்கு துணையாக இருக்கிறோம். எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் நம்முடைய மோட்டோ. இதுதான் திராவிட மாடல். கடந்த கால படிப்பினைகளோடு இந்த கால வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு எதிர்காலம் வளமாக அமையனும். அந்த எதிர்காலம் என்பது நீங்கள் தான். கல்வி நமக்கு எளிதாக கிடைக்கல. நம்ம தலைவர்கள் நடத்துன சமுக நீதி போராட்டங்களால் கிடைத்தது.
இன்னார் தான் படிக்கணும் என்பதை மாற்றி இன்றைக்கு எல்லோரும் படித்து முன்னேறி கொண்டிருக்கிறோம் சமூகநீதி போராட்டத்தினுடைய பலன் தான் இன்று நாம் பார்க்கிற தமிழ்நாடு. மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க மாணவராகிய நீங்கள் ஓரணியில் தமிழ்நாடு திரள வேண்டும் நல்லா படித்து மேலும் உயர வேண்டும் அதற்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றைக்கும் துணை நிற்பான். அதே ோல் இஸ்லாமிய சகோதர்களின் அரசியல் உரிமைகளையும் காப்பாற்றும் இயக்கமாக திராவிட முன்னேற்ற கழகம் எந்நாளும் இருக்கும். இது நான் உங்களுக்கு தர உறுதி. ஜமால் முகமது கல்லூரியின் கல்விப் பணி நூற்றாண்டை கடந்து தொடர வேண்டும். வளர வேண்டும் ஒளிர வேண்டும். கல்விதான் யாராலயும் பறிக்க முடியாத ஒரே சொத்து அதை மாணவர்களுக்கு கொடுப்பதோடு திறன் மேம்பாட்டை வளர்க்கவும் அதற்கேற்ற வசதிகளை வழங்கவும் திராவிட மாடல அரசு தயாராக இருக்கு. அடுத்து இளைய சமுதாயத்தை அறிவு சமுதாயமாக வளர்க்க விரைவில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் தரப் போகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.





















