Gehraiyaan Review | தீபிகா படுகோனின் `ஒன் வுமன் ஷோ’.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட `கெஹ்ரய்யான்’ எப்படி இருக்கிறது?
உறவுகளால் தீர்மானிக்கப்படும் தனிமனித வாழ்க்கையையும், உறவுகளைத் தீர்மானிக்கும் பொருளாதாரம், நேரம் முதலானவற்றையும், திருமணம் மீறிய உறவின் சிக்கல்களையும் பேசியிருக்கிறது `கெஹ்ரய்யான்’.
Shakun Bhatra
Deepika Padukone, Siddhant Chaturvedi, Ananya Pandey, Dhairiya Karwa, Nasruddin Shah
உறவுகளால் தீர்மானிக்கப்படும் தனிமனித வாழ்க்கையையும், உறவுகளைத் தீர்மானிக்கும் பொருளாதாரம், நேரம் முதலானவற்றையும், திருமணம் மீறிய உறவின் சிக்கல்களையும் பேசியிருக்கிறது `கெஹ்ரய்யான்’. தீபிகா படுகோனே, சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே, நஸ்ருத்தீன் ஷா முதலானோர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் சமீப காலமாகப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
யோகா பயிற்சியாளரான அலிஷா (தீபிகா படுகோனே) தன் காதலன் கரண் (தய்ரியா கர்வா) உடனான 6 ஆண்டுக்கால உறவுக்குப்பிறகு, அதில்தான் சிக்கிக் கொண்டிருப்பதாக உணர்கிறார். அலிஷாவும், கரணும் அலிஷாவின் உறவினரான டியா (அனன்யா பாண்டே), ஜைன் (சித்தாந்த் சதுர்வேதி) ஜோடியைச் சந்திக்கிறார்கள். அலிஷாவும், டியாவும் சிறுவயதில் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அதே போல, கரணும், டியாவும் தற்போது மிக நெருக்கமான நண்பர்கள். சுயமாக தொழிலதிபராக வளர்ந்து வரும் ஜைன், தான் எப்போதும் தன் காதலி டியாவாலும், அவரது தாயாலும் மரியாதையின்றி நடத்தப்படுவதாக உணர்கிறான். ஜைனுக்கும், அலிஷாவுக்கு இடையில் தோன்றும் உறவு, அவர்களைச் சுற்றி இருக்கும் அனைவரையும், அவர்களது வாழ்க்கையையும் முற்றிலும் வேறு மாற்றங்களுக்கு உள்ளாக்குகிறது. அது என்ன என்பதைப் பற்றிய படமாக உருவாகியிருக்கிறது `கெஹ்ரய்யான்’.
`கெஹ்ரய்யான்’ திரைப்படத்தில் வரும் நெருக்கமான காட்சிகளை இயக்குவதற்காக பிரத்யேகமாக இயக்குநர் ஒருவரை ஐரோப்பாவில் இருந்து வரவழைத்து, இந்தத் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஷகுன் பத்ரா. காட்சியமைப்பில் உருவாகியிருக்கும் நெருக்கத்தைப் போலவே, திரைக்கதையிலும் அதே போன்ற கச்சிதம் வெளிப்பட்டிருக்கிறது. ஷகுன் பத்ரா, ஆயிஷா தேவித்ரே, சுமித் ராய், யாஷ் சஹாய் ஆகிய நான்கு திரைக்கதை எழுத்தாளர்கள் இந்தத் திரைக்கதையை உருவாக்கியுள்ளனர். எந்தக் கதாபாத்திரத்தின் மீதும் தீர்ப்பளிக்காமல், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நியாயமும் பேசப்பட்டிருக்கிறது. ஒரு திரைப்படமாக தொடங்கும்போது காதல் திரைப்படமாகவும், தொடர்ந்து மர்மத் திரைப்படமாகவும், அடுத்தடுத்து உளவியல் த்ரில்லராகவும் உருவாகியிருக்கும் திரைக்கதை அனைவரும் விரும்புவதாக மாறுவது சந்தேகம் என்பது திரைக்கதையின் மைனஸ்.
மொத்த திரைப்படத்தையும் தாங்கிப் பிடிக்கிறார் தீபிகா படுகோனே. `கெஹ்ரய்யான்’ வெளியாவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு, அவரது கணவர் ரன்வீர் சிங் தீபிகா நடித்த கதாபாத்திரங்களிலேயே மிகவும் சிறந்த கதாபாத்திரமாக இது இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். அது உண்மை என்பதை `கெஹ்ரய்யான்’ நிரூபித்துள்ளது. அலிஷா என்ற கதாபாத்திரத்தின் புற வாழ்க்கையைப் பெரிதும் பேசாமல், அதன் அக வாழ்க்கையைப் பிரதானமாகத் தொட்டிருக்கும் திரைக்கதையில் அலிஷாவாகவே மாறியிருக்கிறார் தீபிகா. தன் கடந்த கால வலிகளில் இருந்து மீள்வது, தன் நிகழ்காலத் தவறுகளின் மீது குற்றவுணர்வு கொள்வது, தன் தவறுகளால் நிகழ்ந்த விளைவுகளைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத போதும், அதனை ஏற்க முயல்வது என அட்டகாசமாக நடித்திருக்கிறார் தீபிகா படுகோனே.
சித்தாந்த் திரிவேதி ஜைன் கதாபாத்திரத்திற்குப் பொருந்திப் போகிறார். எனினும், அவரது `கல்லி பாய்’ ஹேங் ஓவர் இன்னும் முடியாமல் இருப்பதைப் போல தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சித்தாந்த். அலிஷாவின் தந்தையாக வெகு சில காட்சிகளே வந்தாலும், இறுதியில் முக்கிய காட்சியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார் மூத்த நடிகரான நஸ்ருத்தீன் ஷா.
நாம் வாழ்க்கையில் எடுக்கும் தவறான முடிவுகள், நம்மைப் பற்றிய முழு தீர்மானத்தை உருவாக்க முடியாது என்பதையும், நிகழ்கால உறவுகளில் காதல் மட்டுமே இருவர் இணைந்து வாழ்வதைத் தீர்மானிப்பதில்லை என்பதையும் பேசியிருக்கிறது `கெஹ்ரய்யான்’. மனிதர்களின் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை ரொமான்ஸ் திரைப்படம் ஒன்றில் பார்க்க விரும்புபவர்களுக்கும், தீபிகா படுகோனே ரசிகர்களுக்கும் `கெஹ்ரய்யான்’ பிடித்தமான திரைப்படமாக இருக்கும்.
`கெஹ்ரய்யான்’ அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகியுள்ளது.