அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
தமிழ்நாட்டில் கடந்த 2 நாளில் மட்டும் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இதனால், எதிர்க்கட்சிகள் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக தங்களது ஆட்சியைத் தக்க வைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திமுக-வை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்ற அதிமுக, பா.ஜ.க., தவெக ஆகிய கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.
அடுத்தடுத்து கொலை:
அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் சட்டம் ஒழுங்கும் திமுக-விற்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. திருநெல்வேலியில் நேற்று காலை தொழுகை முடிந்து வீடு திரும்பிய ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாகிர் உசேன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் திருநெல்வேலி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று ஈரோட்டில் நெடுஞ்சாலையில் காரில் மனைவியுடன் சென்று கொண்டிருந்த ஜான் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிப்படுகொலை செய்துள்ளது.
பட்டப்பகலில் நட்ட நடுரோட்டில் அடுத்தடுத்து 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கொலைகள் அரங்கேறியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது திமுக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வியை எழுப்பி வருகின்றன.
திமுக ஆட்சியில் அதிரவைத்த கொலைகள்:
மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் சென்னையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம், திருநெல்வேலியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திமுக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடிகள் சிலர் அடுத்தடுத்து போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டதும், ஜெயக்குமார் கொலை வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதும் அரசு மீது கடும் கண்டனங்களை குவித்தது.
பாலியல் வன்கொடுமை:
திருட்டு, கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் ஆகியவற்றுடன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளேயே மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரம், ஈசிஆர் சாலையில் பெண்களை திமுக கொடி கட்டிய காரில் இளைஞர்கள் துரத்திய விவகாரம் என அடுத்தடுத்து திமுக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், திமுகவிற்கு எதிராக தீவிர பரப்புரையை அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் கடினமான நடவடிக்கைகளை ஆளுங்கட்சி எடுக்க வேண்டிய சூழலில் உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

