தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் கஞ்சா போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதாக வீடியோ பரவி வருகிறது. இது உண்மையா? பொய்யா? என்பதை தெரிந்து கொள்வோம்.

Claim: சென்னை, செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மாணவர்கள் கஞ்சா போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர் எனப் பரவும் காணொளி.
Fact: வைரல் காணொளி கடந்தாண்டு புதுச்சேரி மாநிலம் அரியூர் பள்ளி மாணவர்கள் தாக்கிக் கொண்ட சம்பவத்தின் காட்சிகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
நாம் படிக்கும் நாள் முதலே பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பிரச்சினைகளைப் பார்த்திருப்போம். சின்னசிறு பிரச்சினைகள் கூட அவர்கள் கண்களுக்கு மிகப்பெரியதாகத் தெரியும். அந்த வகையில் சிறுசிறு கைக்கலப்புகளும் தோன்றி மறைவதுண்டு. ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளியில் பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கரமாகத் தாக்கிக் கொள்கின்றனர். மேலும், மற்றொரு மாணவர் அருகேக் கிடந்த விறகுக் கட்டையை எடுத்து கடுமையாக தாக்குகிறார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
aiadmk_itwing_ofl எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 14 மார்ச் 2025 அன்று, “தமிழ்நாடா, இல்லை வடநாடா என்றே தெரியவில்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாட்டின் அப்பா வளர்ப்பில் பள்ளி பிள்ளைகள் கஞ்சா போதையில் ஆனந்தமாய் ஆடி பாடி மகிழ்ந்து வருகின்றனர்,” என்று பதிவிடப்பட்டு, வைரல் காணொளியும் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், அதில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்ஸ்டாகிராம் பக்கமும் இணைக்கப்பட்டிருந்தது. இதே காணொளியைப் பகிர்ந்து எக்ஸ் பயனர் எஸ்.எஸ்.ஆர் (@SSR_Sivaraj), முகநூல் பயனர் குயிலம் மா கோவிந்தன் (@capitan.govinthan), திரெட்ஸ் பயனர் பிரவீன் (@praveen.kgl) போன்ற பலர் பதிவிட்டிருந்தனர்.
Fact Check:
மேற்கூறப்பட்ட தகவல்கள் குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த செய்தி போலியானது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பரவும் காணொளியின் உண்மைத் தன்மையை அறிய அதனை தெளிவாக தணிக்க செய்தோம்.
அப்போது, தாக்குதல் நடந்த இடத்தின் அருகே இருந்த கட்டடத்தின் சுவற்றில் புதுச்சேரி - 5 என எழுதப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. தொடர்ந்து பரவிவரும் வைரல் காணொளி தமிழ்நாட்டில் நடந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்ததால், அது உண்மையா என்பதை ஆராய சுவர் விளம்பரத்தில் பார்த்த புதுச்சேரியை மையமாக வைத்து பள்ளி மாணவர்கள் மோதல் என கூகுள், பிங்க் போன்ற தேடல் தளங்களில் அலசினோம். அதில், “நடுரோட்டில் விறகு கட்டையால் மாறிமாறி தாக்கி கொண்ட அரசு பள்ளி மாணவர்கள்: புதுச்சேரியில் பரபரப்பு” என்ற தலைப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. 16 செப்டம்பர் 2024 அன்று இது பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த செய்தியில் கொடுக்கப்பட்ட படத்தில் வைரல் காணொளியில் தோன்றிய காட்சிகள் போன்ற சித்தரிப்புகள் இருந்தன. அதை மேலும் ஆராய முற்பட்டோம்.
மேற்கொண்டு செய்தியில், “புதுச்சேரி அடுத்த அரியூரில் இயங்கி வரும் அரசு பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, கடுமையாக ஒருவருக்கொருவர் பேசியும் கைகளால் தாக்கிக் கொண்டனர்.
இதில் ஒரு கட்டத்தில் மாணவர்கள் அருகில் கிடந்த விறகு கட்டை எடுத்து சரமாரியாக ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்திலும் வைரலாக வருகிறது,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே செய்தியை அன்றைய தினத்தில் தந்தி டிவி செய்திகளும் பதிவிட்டிருந்தது. அதோடு அந்த செய்தியில் வைரல் காணொளியும் மாணவர்களின் முகத்தை மறைத்து இணைக்கப்பட்டிருந்தது. பதிவு செய்யப்பட்ட செய்தியில், “அரியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலர் ஒருவரையொருவர் கட்டையால் கடுமையாக தாக்கிக் கொள்ளும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனை வீடியோ எடுத்த நபருடன், செல்போனை ஆஃப் செய்ய வேண்டுமென மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும், இச்சம்பவம் தொடர்பாக புகாரளிக்கப்படவில்லை என வில்லியனூர் போலீசார் தெரிவித்துள்ளனர்,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் வைரலாகும் காணொளியும், செய்தி நிறுவனங்களால் கடந்தாண்டு பதிவு செய்யப்பட்டிருக்கும் காணொளியும் ஒன்று என்பதை நம்மால் உறுதிசெய்ய முடிந்தது. அதன்படி, இது தமிழ்நாடு செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த சம்பவம் அல்ல என்பதும் தெளிவானது.
கடைசியாக, இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஒரு விளக்கக் காணொளியை கண்டோம். “பள்ளி மாணவர்கள் மோதல் தமிழ்நாடு என்று பரவும் புதுச்சேரி காணொளி!” என்று தலைப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருக்கும் அந்த காணொளியில், சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது என திரித்து போலியாகப் பரப்படுகிறது எனவும், இந்த காணொளி கடந்தாண்டு புதுச்சேரியில் நடந்த சம்பவம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பள்ளி மாணவர்கள் மோதல் தமிழ்நாடு என்று பரவும் புதுச்சேரி காணொளி!@CMOTamilnadu @TNDIPRNEWS https://t.co/UNtjOGPDyj pic.twitter.com/7JJ4pklz0o
— TN Fact Check (@tn_factcheck) March 14, 2025
முடிவு:
மேற்கொண்ட தணிக்கைகளின்படி, வைரலாகும் காணொளி தமிழ்நாட்டில் படம்பிடிக்கப்பட்டதல்ல என்பதும், கடந்தாண்டு அது புதுச்சேரி அரியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்ளும் காணொளிப் பதிவு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இணையவாசிகள் எப்போதும் தாங்கள் கிளிக் செய்யும் இணையதள முகவரியை சரிபார்க்கும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Telugu post என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

