GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
கேட் நுழைவுத் தேர்வு முடிவுகளை ஐஐடி ரூர்க்கி வெளியிட்டுள்ளது. இதை எப்படிக் காண்பது என்று பார்க்கலாம்.

முதுகலை பொறியியல் படிப்புகளில் சேரவும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலையில் சேரவும் நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வு முடிவுகளை ஐஐடி ரூர்க்கி வெளியிட்டுள்ளது. மாணவர்கள், goaps.iitr.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளைக் காணலாம்.
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
- தேர்வர்கள் gate2025.iitr.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- பதிவு எண், பிறந்த தேதி, கேப்ட்ச்சா ஆகியவற்றை சரியாக உள்ளிடவும்.
- கேட் தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.
2025ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு பிப்ரவரி 1 முதல் 16ஆம் தேதி வரை பல்வேறு ஷிஃப்ட்டுகளில் நடத்தப்பட்டது. மொத்தம் 30 தாள்களுக்கு கேட் தேர்வு நடத்தப்பட்டன. பிப்ரவரி 27 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை விடைகளை ஆட்சேபிக்க அவகாசம் அளிக்கப்பட்டது.
முன்னதாக, கேட் தேர்வு ஹால் டிக்கெட்டில் இட்லி, சட்னி நோ சாம்பார் என்று குறிப்பிட்டு இருந்தது சர்ச்சைகளை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
மதிப்பெண் அட்டை எப்போது?
கேட் தேர்வு முடிவுகளின் மதிப்பெண் அட்டைகள், மார்ச் 28ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்று ஐஐடி ரூர்க்கி தெரிவித்துள்ளது. மதிப்பெண் அட்டையை மார்ச் 31ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். அதற்குப் பிறகு மதிப்பெண் அட்டையைப் பெற ஒவ்வொரு தாளுக்கும் ரூ.500 செலுத்த வேண்டும்.
ஒரு தேர்வர் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட் தேர்வை எழுதலாம். முதன்முதலாக 1983ஆம் ஆண்டு கேட் தேர்வு நடத்தப்பட்டது. இது ஐஐடிக்கள் சென்னை, டெல்லி, மும்பை, காரக்பூர் மற்றும் கான்பூர் மற்றும் ஐஐஎஸ்சி-யில் முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்பட்டது.
கேட் நுழைவுத் தேர்வு
மத்திய அரசுக் கல்வி நிறுவனங்கள் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் மாணவர்களை அனுமதிக்க கேட்என்ற பெயரில் நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.

