Video: ''நீங்க நல்லா படிக்கணும்''- மாணவர்கள் முன் 50 தோப்புக்கரணம் போட்டு மன்றாடிய தலைமை ஆசிரியர்!
ஓர் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் 50 தோப்புக் கரணங்கள் போட்டது அனைவரையும் நெகிழ்ச்சியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியவில்லை என்று கூறியும், அவர்களின் திறமையை வளர்க்கக் கோரியும் தலைமை ஆசிரியர் 50 தோப்புக் கரணங்கள் போட்டது அனைவரையும் நெகிழ்ச்சியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.
ஆந்திர மாநிலம், விசாக நகரம், பெண்ட கிராமத்தின் ஜில்லா பரிஷத் அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஜில்லா பரிஷத் பள்ளி தலைமை ஆசிரியர் சிண்டா ரமணா, மாணவர்கள் முன்னாலேயே தொடர்ந்து 50 முறை தோப்புக்கரணம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 2.36 நிமிடங்களுக்கு இந்த வீடியோ நீள்கிறது.
வீடியோவில் இருப்பது என்ன?
வீடியோவில், தலைமை ஆசிரியர் ரமணா, பள்ளியில் உள்ள ஓர் அரங்கத்தில் ஏராளமான மாணவர்களுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறார். அவருக்கு அருகில் மேடையில் ஒரு மாணவனும் ஆசிரியரைப் போன்ற ஒருவரும் நிற்கின்றனர்.
ஆசிரியர் ரமணா பேசும்போது, ‘’என் மாணவர்களின் கற்றல் திறனையும் ஒழுக்கத்தையும் மேம்படுத்துவதில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். உங்களை அடிக்கவோ, திட்டவோ முடியாது. எங்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. எவ்வளவுதான் முயற்சி செய்து நாங்கள் கற்பித்தாலும், உங்களின் படிப்பில் எந்த மாற்றமும் இல்லை. நடத்தையில், கல்வியில், எழுத்துத் திறனில், வாசிப்புத் திறனில் வித்தியாசம் இல்லை.
பிரச்சினை உங்களிடமா அல்லது எங்களிடமா?
பிரச்சினை உங்களிடமா (மாணவர்கள்) அல்லது எங்களிடமா? (ஆசிரியர்கள்) எங்களிடம் பிரச்சினை என்று நீங்கள் கூறினால், உங்கள் முன்பு கீழே விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் விரும்பினால், நான் தோப்புக்கரணமும் போடுகிறேன்’’ என்கிறார்.
ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் மாணவர்கள், அவர் தோப்புக் கரணம் போடப் போட, ’’வேண்டாம் சார் வேண்டாம் சார்!’’ என்று பதைபதைக்கின்றனர்.
ஓர் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் 50 தோப்புக் கரணங்கள் போட்டது அனைவரையும் நெகிழ்ச்சியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
சில நாட்களுக்கு முன்னதாகவே இந்த வீடியோ வெளியாகி இருந்தாலும், தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

