Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை..! ப்ரோமாவால் கடுப்பான ரசிகர்கள்.. “மிஸ் ஆச்சுனா?..! விஜய் டிவிக்கு வார்னிங்
Siragadikka Aasai Promo: சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வார ப்ரோமோ வெளியான நிலையில், விஜய் டிவியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Siragadikka Aasai Promo: சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வார ப்ரோமோ வெளியான நிலையில், விஜய் டிவி ரசிகர்களை ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிறகடிக்க ஆசை:
தமிழ் தொலைக்காட்சிகளில் நூற்றுக்கணக்கான சீரியல்கள் தினசரி ஒளிபரப்பப்படுகின்றன. ஆனால், அவற்றில் ஒரு சில மட்டுமே அனைத்து தரப்பு பார்வையாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.அப்படி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு கொண்டாடப்படுவதோடு, டிஆர்பி-யிலும் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த தொடரில், மற்ற தொடர்களை போன்று ஓவர் பில்டப் எதுவும் இருக்காது. எதார்த்தத்திற்கு நிகரானதாக இருப்பதால் தான் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.
”வாழ்க்கையை காப்பாற்ற போராடும்” ரோகிணி
தனக்கு ஏற்கனவே திருமணமானதையும், ஒரு குழந்தை இருப்பதையும் மறைத்து, மனோஜை திருமணம் செய்யும் ரோகிணி, தான் மலேசியாவைச் சேர்ந்த மிகப்பெரிய பணக்காரரின் மகள் என மாமியார் விஜயாவிடம் பொய் சொல்லி ஏமாற்றி வருகிறார். பணக்காரி என்பதால் ரோகிணிக்கு ஆதரவாக செயல்படும் விஜயா, ஏழை வீட்டு பெண் என்பதால் தனது இரண்டாவது மருமகளான மீனாவை வெறுத்து ஒதுக்குகிறார். இதனிடையே, பொய்களால் கட்டமைத்த தனது வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என பல தவறான விஷயங்களையும் ரோகிணி செய்கிறார். மனோஜின் தம்பியான முத்துவை வீட்டு விட்டு வெளியே அனுப்பவும் முயற்சித்து வருகிறார். இதனால் ரோகிணி ரசிகர்களால் வெறுக்கப்படுவதோடு, வில்லியாகவும் கருதப்பட்டு வருகிறார்.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
‘ரோகிணியின் செயல்களால் கடுப்பாகியுள்ள ரசிகர்கள், அவர் பணக்காரி இல்லை என்பது எப்போது அம்பலப்படும், அந்த நேரத்தில் விஜயாவின் ரியாக்ஷன் என்ன என்பதை அறிய மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் விதமாக தான், ஒவ்வொரு வாரமும் ப்ரோமோக்கள் வெளியாகின்றன. ரோகிணி பற்றிய உண்மை வெளியாவது, மீனாவிடம் ரோகிணி அடி வாங்குவது என பல ப்ரோமோக்கள் அவ்வப்போது வெளியாகின்றன. அதை நம்பி ரசிகர்கள் சீரியலை பார்த்தால், அந்த காட்சிகள் அனைத்தும் கற்பனை மற்றும் கனவு என கூறி இயக்குனர் ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்.
கொந்தளித்த ரசிகர்கள்:
அந்த வகையில் தான், கடந்த வாரம் அண்ணாமலையின் நண்பரின் மகளின் திருமணம் தொடர்பான ப்ரோமோ வெளியானது. அதில் ரோகிணியின் மலேசியா மாமாவாக நடித்தவர், முத்துவிடம் சிக்குவதாக காண்பிக்கப்பட்டு இருந்தது. அதனை எதிர்பார்த்து வாரம் முழுவதும் ரசிகர்கள் காத்திருந்தால், இரண்டு வெவ்வேறு காட்சிகளை வெட்டி ஒட்டி ப்ரோமாவாக வெளியிட்டு ரசிகர்களை ஏமாற்றி இருந்தது வார இறுதியில் தான் தெரிந்தது. இறுதி வரை மலேசியா மாமாவாக நடித்தவர், அண்ணாமலை குடும்பத்திடம் சிக்காமலேயே திருமணம் நடந்தே முடிந்துவிட்டது. இதனால், ரசிகர்கள் கடுப்பாகி விட்டு சமூக வலைதளங்களில் சிறகடிக்க ஆசை சீரியலை திட்டி தீர்த்தனர்.
மீண்டும் ஒரு ப்ரோமோ நாடகமா?
இந்நிலையில் தான் சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், “ ரோகிணியின் மலேசியா மாமாவாக நாடகமாடிய நபர், அண்ணாமலை வீட்டிற்கே வந்து ரோகிணி பற்றிய அனைத்து உண்மைகளையும் போட்டு உடைக்கிறார். தனது பாசமிகு மருமகள், பணக்காரி இல்லை என அறிந்ததுமே கோபத்தின் உச்சிக்கே சென்ற விஜயா, ரோகிணியை அடித்து கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை போடுவது” தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக, நீங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த தருணம் என வாய்ஸ்-ஓவர் எல்லாம் கொடுத்து பில்டப் ஏற்றியுள்ளனர்.
வார்னிங் கொடுத்த ரசிகர்கள்:
ப்ரோமோ வெளியான இரண்டு மணி நேரத்திலேயே 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்க்க, அது ட்ரெண்டிங்கில் உள்ளது. அதேநேரம், அதன் கமெண்ட் பாக்சில் சிறகடிக்க ஆசை சீரியல் குழுவை ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். இறுதியில் இந்த ப்ரோமோவில் உள்ள காட்சிகள் அனைத்தும், ரோகிணியின் கனவு அல்லது கற்பனை என ஏமாற்றுவதற்கு இப்படி ஒரு பில்டப்பா? என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடக்காததுக்கு எதுக்குபா இவ்ளோ சீன் போட்றிங்கா? இதுமட்டும் பொய்யாக இருந்தால் இனி விஜய் டிவியையோ அல்லது சிறகடிக்க ஆசை தொடரையே இனிமேல் பார்க்கவே மாட்டேன் என்றும் சிலர் எச்சரித்து கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
எனவே ப்ரோமோவில் இருப்பது உண்மை காட்சிளா? அல்லது வழக்கம்போல் கனவு அல்லது கற்பனை என ரசிகர்களை ஏமாற்றுவார்களா? என்பது அடுத்த வார இறுதியில் தான் தெரியவரும். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை சிறகடிக்க ஆசை சீரியல் குழு பூர்த்தி செய்யுமா? அல்லது மீண்டும் எமாற்றி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகுமா? என பொறுத்து இருந்து பார்க்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

