நெல்லை அருகே பாமக பிரமுகர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - போலீசார் தீவிர விசாரணை
நெல்லையில் பட்டப்பகலில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயி மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் செல்லப்பா(59). இவரது மனைவி ரெஜிலா. இவர் வழக்கறிஞராக உள்ளார். தற்போது செல்லப்பா குடும்பத்தோடு நெல்லை கேடிசி நகர் பகுதியில் வசிக்கிறார். மேலும் செல்லப்பா நெல்லை மாவட்ட பாமக விவசாய பிரிவு செயலாளராகவும் இருந்து வருகிறார். மேலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது வழக்கு தொடர்ந்து அதனை மீட்டெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டு வருவதுடன் பல்வேறு பொதுநல பிரச்சனைகளிலும் தலையிட்டு அதற்கு தீர்வு கண்டு வருகிறார். செல்லப்பாவின் குடும்பத்தினருக்கு சொந்தமான விவசாய நிலம் நெல்லை பாளையங்கோட்டை அடுத்த மேலப்பாட்டம் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் வழக்கமான விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக மேலப்பாட்டம் விவசாய நிலத்திற்கு செல்லப்பா சென்றுள்ளார். அங்கு விவசாய பணிகளை பார்த்துக் கொண்டிருந்த போது முற்பதற்குள் இருந்து திடீரென வெளியே வந்த மர்ம நபர்கள் செல்லப்பாவின் மீது நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசியுள்ளனர். ஆனால் அது அவர் மீது படாத நிலையில் வெடிக்காமல் கீழே விழுந்துள்ளது. இதனை பார்த்த அதிர்ச்சியில் ஓட தொடங்கிய செல்லப்பா மீது பெட்ரோல் வெடிகுண்டு ஒன்றையும் வீசி உள்ளனர். அதுவும் வெடிக்காமல் கீழே விழுந்து சிதறி கண்ணாடி துகள்கள் செல்லப்பாவின் உடலின் பல்வேறு பகுதிகளில் மீது பட்டுள்ளது. இதில் அவருக்கு கை மற்றும் காலில் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். செல்லப்பாவை மீட்டு அக்கம் பக்கத்தினர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். செல்லப்பா அளித்த புகாரின்பேரில் தாலுகா போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் நாட்டு வெடிகுண்டை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவ இடத்தில் நெல்லை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா ஆகியோர் ஆய்வு நடத்திய பின்னர் பாதிக்கப்பட்ட செல்லப்பாவிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்லப்பாவுக்கும் அவரது உறவினருக்கும் சொத்து பிரச்சனை காரணமாக முன்பகை இருந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே சொத்து பிரச்சனையால் செல்லப்பா மீது வெடிகுண்டு வீசப்பட்டதா? அல்லது கோயில் நிலங்களை மீட்பது தொடர்பான பிரச்சனையில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் பட்ட பகலில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயி மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது