பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
ஒரு காலத்தில் அதிமுகவை கைப்பற்றுவேன் என்று சபதமிட்ட ஓ.பன்னீர்செல்வம், தற்போது அதிமுகவில் இணைய எந்த நிபந்தனையும் விதிக்கமாட்டேன் என்று கூறியிருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல் களம் விறுவிறுப்பான கட்டத்தை நாளுக்கு நாள் எட்டிக்கொண்டே வருகிறது. ஆட்சியைத் தக்க வைக்க திமுகவும், ஆட்சியை மீண்டும் கைப்பற்ற அதிமுகவும், மிகப்பெரிய கட்சிகளான பாமக, மதிமுகவில் சண்டைகள் அரங்கேறி வரும் நிலையில், ஆட்சியைப் பிடிக்க விஜய் ஒரு பக்கம் தீவிர களப்பணியாற்றி வருகிறார்.
எடப்பாடிக்கு கோரிக்கை விடுத்த ஓபிஎஸ்:
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் ஆள் அரவமற்ற நிலைக்கு ஆளாகியிருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். முன்னாள் முதலமைச்சர், ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி என்ற பட்டங்களை வைத்திருந்தாலும் இன்றைய அரசியல் சூழலில், இவரது முடிவுகளும், திட்டங்களும் தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவது போல தெரியவில்லை.

ஜெயலலிதா மறைவிற்கு முதலமைச்சராகி, பின்னர் சசிகலாவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு, பின்னர் எடப்பாடியுடன் இணைந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதன் பின்னர், சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு எடப்பாடியுடன் மோதல் போக்கு ஏற்பட்டு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு அதிமுகவை கைப்பற்றுவேன் என்று ஆவேச குரல் எழுப்பியவர்.
சரிந்த செல்வாக்கு:
ஆனால், தற்போது அவரது நிலைமை பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளது. அதிமுக-வுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்த பிறகு, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்த தினகரன் அமைதிப்போக்கை கடைபிடித்து வருகிறார். சசிகலாவும் பெரியளவு அரசியல் செயல்பாடுகள் இல்லாமல் உள்ளார்.
இந்த நிலையில், அதிமுகவில் இணைவதற்கு எந்தவித நிபந்தனையும் விதிக்கமாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமிக்கு வெளிப்படையாக கோரிக்கை விடுத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு பன்மடங்கு குறைந்துள்ளதாகவே தெரியவந்துள்ளது.
பரிதாப நிலை:
வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக உருவெடுக்க, எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாக செல்வதே அவர் முன்பு உள்ள ஒரே வழியாக உள்ளது. ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக உள்ளார். அவருக்கு முன்புபோல பெரியளவு அரசியல் செல்வாக்கு இல்லாத நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை தற்போது சேர்த்துக்கொள்ளாவிட்டால் பெரிய தாக்கத்தை வாக்கு வங்கியில் ஏற்படுத்தாது என்றே அதிமுக தலைமை கருதுவதாக கூறப்படுகிறது.

மதுரையில் நடக்க உள்ள மாநாட்டில் பல முக்கிய முடிவுகளை ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளார். அவர் தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களுக்கு குறைவாக உள்ள நிலையில், கட்சி தொடங்கி அதன் சின்னத்தையும், கட்சியையும் மக்களிடம் கொண்டு செல்வது, மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவது என்பது எல்லாம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சவாலான விஷயமாக அமையும். இதனால், அவர் தனிக்கட்சி தொடங்க வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
என்ன நடக்கப்போகிறது?
இந்த நிலையில், மதுரை மாநாட்டில் செப்டம்பர் 4ம் தேதி நடக்கும் மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் என்ன கூறப்போகிறார்? அவர் எடுக்கப்போகும் முடிவுகள் என்ன? அவரை எடப்பாடி பழனிசாமி அதிமுக-வில் இணைத்துக்கொள்வாரா? என்பதற்கான பதில் அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும். இதனால், அதிமுக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.





















