கணவர்களுக்கு போதாத காலம் - மனைவி கொடுத்த புகார், அடித்து துன்புறுத்தி பணம் பறித்த போலீஸ்? சோக முடிவு
UP Husband Suicide: மனைவி குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினரின் கொடுமைகளை தாங்க முடியாமல், உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UP Husband Suicide: குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உயிரிழந்தவரின் குடும்பத்தினர் போலீசாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கணவன் தற்கொலை:
குடும்ப பிரச்னை, மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினர் தொல்லை தாங்க முடியாமல், கணவர்கள் தற்கொலை செய்துகொள்வது என்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், உத்தரபிரதேசத்தின் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் விட்டுச் சென்றுள்ள மரணக் குறிப்பில், இரண்டு காவலர்கள் தன்னை தாக்கி மிரட்டி பணம் பறித்ததோடு, தனது மனைவியின் குடும்ப உறுப்பினர்கள் தான் எனது இந்த கடுமையான முடிவுக்கு காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
அடித்து பணம் பறித்த போலீசார்?
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவர் திலீப் ராஜ்புத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சேடா நாக்லா பகுதியைச் சேர்ந்த தன்னை, கணவர் திலீப் குடிபோதையில் தாக்கியதாக மனைவி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுதொடர்பாக திலீப்பும் அவரது தந்தையும் உள்ளூர் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர். அங்கு காவலர் யஷ்வந்த் யாதவ் என்பவர், இந்த விஷயத்தை தீர்க்க ரூ.50,000 கேட்டதாகக, திலீப்பின் குடும்பத்தினரால் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திலீப் மறுத்ததால், காவலர் அவரைத் தாக்கியதாகவும் பின்னர் அந்தத் தொகை, மற்றொரு காவலரான மகேஷ் உபாத்யாய் என்பவரால் ரூ.40,000 ஆகக் குறைக்கப்பட்டது, மேலும் பணம் செலுத்தப்பட்ட பின்னரே திலீப் வீட்டிற்கு அனுப்பப்பட்டார் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனம் உடைந்து தற்கொலை முடிவு:
போலீசாரின் கொடுமைகளால் மனமுடைந்த அந்த நபர், தனது வெள்ளை நிற பேண்டிலேயே நீல நிற பேனாவால் மரண குறிப்பை எழுதியுள்ளார். அதில், “தனது மனைவியின் தந்தை வான்வாரி லாலா, அவரது சகோதரர் ராஜு, மைத்துனர் ரஜ்னேஷ் ராஜ்புத் மற்றும் இரண்டு காவலர்கள் உடல் மற்றும் மனரீதியிலான துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் மற்றும் மிரட்டி பணம் பறித்தனர்” என எழுதியுள்ளார். தொடர்ந்து மறுநாள் காலையில் அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில், திலீப் சடலமாகவே காலை குடும்ப உறுப்பினர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள், உடலை கைப்பற்ற வந்த காவல்துறையினரை முற்றுகையிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
குடும்பத்தினர் சொல்வது என்ன?
திலீப்பின் மாமா ஜிதேந்திரா பேசுகையில் சம்பவ தினத்தன்று, ”தம்பதியினரிடையே ஏற்பட்ட சண்டையில் தனது மனைவியை அவரது தாய் வீட்டில் திலீப் இறக்கிவிட்டார். அதன் தொடர்ச்சியாகவே அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறின. அவரது மனைவி மற்றும் உறவினர்கள் புகார் அளித்தனர், திலீபை போலீசார் கைது செய்தனர். அவரிடம் ரூ.50,000 லஞ்சம் கேட்டு போலீசார் அவரை அடித்து உதைத்தனர். ரூ.40,000 கொடுத்த பின்னரே அவரை விடுவித்தனர்," என்று தெரிவித்துள்ளார். திலீப்பின் தந்தையும் இந்த அடிதடிக்கு தனது மகனின் மாமியார் தூண்டுதலே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
காவல்துறை சொல்வது என்ன?
குடும்ப வன்முறை சம்பவம் தொடர்பாக புகார் பெறப்பட்டதாகவும், இரு தரப்பினரும் காவல் நிலையத்திற்குச் சென்றதாகவும் ஃபரூக்காபாத் காவல் கண்காணிப்பாளர் ஆர்த்தி சிங் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, "இரு தரப்பினரும் சமரசம் செய்ய நாங்கள் உதவினோம். அந்த நபர் தனது வீட்டை அடைந்து தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் எந்த காயங்களும் காணப்படவில்லை. ஒரு புகாரில், அந்த நபரின் குடும்பத்தினர் அவரது மனைவியின் உறவினர்கள் மூன்று பேர் மற்றும் இரண்டு காவலர்கள் மீது பெயர் குற்றம்சாட்டியுள்ளனர். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்துள்ளார்.





















