T20 World Cup Final : இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மகுடம் சூடுவதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்று, சூப்பர் 8 சுற்று மற்றும் அரையிறுதிப் போட்டிகள் ஆகியவற்றை தொடர்ந்து, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மூன்றாவது முறையாகவும், தென்னாப்ரிக்கா அணி முதல் முறையாகவும் முன்னேறியுள்ளது.
தங்களது இரண்டாவது டி20 கோப்பையை வெல்ல இந்திய அணியும், முதல் ஐசிசி கோப்பையை வெல்ல தென்னாப்ரிக்கா அணியும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் போட்டி, இன்று நடபெற உள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதும் இறுதிப்போட்டி, இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
நடப்பு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பிரதான பலம் என்பது பந்துவீச்சு என்பதே உண்மை. பும்ரா வழிநடத்தும் பவுலிங் யூனிட்டில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் துல்லியமாக பந்துவீசுவதோடு, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் எடுத்து வருகின்றனர். சுழற்பந்துவீச்சில் குல்தீப் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் எதிரணிக்கு மிடில் ஓவர்களில் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
பேட்டிங் யூனிட் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், சரியான நேரத்தில் பேட்ஸ்மேன்கள் சரியான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பியுள்ளனர்.குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ரன் குவித்து வருகின்றனர். இறுதிக் கட்டங்களில் அக்ஷர் படேலும் கைகொடுப்பது அணிக்கு பலன் அளிக்கிறது. இதன் காரணமாக இரண்டாவது முறையாக டி20 உலக் கோப்பையை வெல்ல முழுவீச்சில் தயாராகி வருகிறது. அதேநேரம், தொடர்ந்து சொதப்பி வரும் கோலி, ஜடேஜா மற்றும் துபே போன்றவர்களும், இன்று சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணி கோப்பையை வெல்வது உறுதி.
நடப்பு டி20 உலகக் கோப்பையில் ஒரு தோல்வியை கூடாத மற்றொரு அணியாக தென்னாப்ரிக்கா உள்ளது. இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் என சரியான கலவையில் அமைந்துள்ள இந்த அணி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி வருகிறது.பேட்டிங்கில் டி காக், மார்க்ரம், ஸ்டப்ஸ், கிளாசென் மற்றும் மில்லர் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் ரபாடா, பார்ட்மேன் மற்றும் நோர்ட்ஜே ஆகியோர் எதிரணிகளுக்கு கடும் நெருக்கடியை தந்து வருகின்றனர். இதனால், தென்னாப்ரிக்காவை வீழ்த்துவது இந்திய அணிக்கு அவ்வளவு எளிய காரியமாக இருக்காது என்பதே உண்மை.