ஓய்வை அறிவித்த விராட் கோலி?ஷாக்கான ரசிகர்கள், BCCI! திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | Virat Kohli Retirement
இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்து அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து, தற்போது விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்ததாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நடைபெற்றுவந்த ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த கோலி, அடுத்த சில வாரங்களில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9 ஆயிரத்து 230 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம், டெண்டுல்கர், டிராவிட் மற்றும் கவாஸ்கரை தொடர்ந்து, இந்திய அணிக்காக டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக கோலி திகழ்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 7 இரட்டை சதங்களை விளாசி, வேறு எந்தவொரு இந்திய வீரரும் நிகழ்த்தாத சாதனையை தன் வசம் வைத்துள்ளார் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு சாதனைகளை தன் வசமாக்கி வைத்துள்ளார் விராட் கோலி.
இந்தநிலையில் சமீபத்தில் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையில், கோலியின் முடிவை கேட்டு அதிர்ந்த பிசிசிஐ, கோலியிடம் அவரது முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விராட் கோலி இதுவரை அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
தற்போது 36 வயதாகும் கோலி, இன்னும் 2 ஆண்டுகளாவது விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், ஏற்கனவே டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், தற்போது டெஸ்டிலிருந்தும் ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்துள்ளது, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்து அணி உடனான டெஸ்ட் தொடரின் மூலம், அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான சுற்றுகள் தொடர்கிறது. சுமார் 2 ஆண்டுகளுக்கு இந்த போட்டிகள் நீடிக்கும். இதனை கருத்தில் கொண்டே எதிர்கால தலைமுறைக்கு வாய்ப்பளிக்கும் விதமாக கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றார். அதே காரணத்தால் தான், விராட் கோலியும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.





















