விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா? வைரலாகும் வதந்தி! ஒரே பதிவில் முடித்துவிட்ட நயன்தாரா
கணவர் விக்னேஷ் சிவனுடன் நகைச்சுவையாக எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்த நயன்தாரா, “எங்களைப் பற்றிய வதந்திகளை பார்க்கும் போது எங்களின் ரியாக்ஷன் இதுதான்” என்ற பகிர்வை செய்துள்ளார்.

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனை பிரியப்போகிறார் என்ற வதந்திகள் பரவிய நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இன்ஸ்டாவில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன்
பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன், தமிழ் சினிமாவின் மிகவும் ரசிக்கப்பட்ட ஜோடிகளில் ஒருவராக உள்ளனர். இருவரும் நானும் ரெளடி தான் படத்தில் இருந்து காதலித்து பல ஆண்டுகள் கழித்து, கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் மாமல்லபுரத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் மிக பிரமாண்டமாகவும், ஆடம்பரமாகவும் நடைபெற்றது.
திருமணத்துக்குப் பிறகு, வாடகை தாய் மூலமாக உயிர் மற்றும் உலகு என பெயரிடப்பட்ட இரட்டையர்கள் இவர்களுக்கு பிறந்தனர். இதனால் இவர்கள் தம்பதியாகவும், பெற்றோர்களாகவும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக முன்னெடுத்து வந்தனர்.
பிரிவா? பரவும் வதந்தி!
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இணையத்தில் “நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடையே பிரிவு ஏற்படப் போகிறது” எனும் வதந்தி பரவத் தொடங்கியது. விக்னேஷ் சிவனை நயன்தாரா பிரியவிருக்கிறாரா? என்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் எழுந்தன.
இதற்கு முக்கிய காரணமாக, நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மறைமுகமான, அதேசமயம் சர்ச்சைக்குரிய பதிவை இடுப்பட்டதாக தகவல் பரவியது. அந்த பதிவு,
“முட்டாள்தனமாக நடக்கும் ஒருவரை திருமணம் செய்தால், அதற்குப் பலன் நாம்தான் அனுபவிக்க வேண்டி வரும்” என இருந்ததாக கூறப்பட்டது.
இந்த பதிவு சில மணிநேரங்களில் நீக்கப்பட்டதாகவும், இதுதான் அவர்களின் உறவில் பிளவு இருப்பதற்கான சிக்னலாகவே பலரும் எடுத்துக் கொண்டனர். ஆனால் நயன்தாராவின் தரப்பிலிருந்து இது குறித்து உடனடியாக மறுப்பு வந்தது. “அவர் இதுபோன்ற எந்தவொரு பதிவும் போட்டதில்லை. இது முழுமையாக உருவாக்கப்பட்ட பொய்யான செய்தி” என அவர்கள் தெரிவித்தனர்.
நயன்தாராவின் நேரடி பதில்!
இந்த வதந்திகளுக்கு பின் சென்று விளக்கம் அளிக்காமல், தனது ஸ்டைலில் பதிலளித்துள்ளார் நயன்தாரா. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கணவர் விக்னேஷ் சிவனுடன் நகைச்சுவையாக எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்த நயன்தாரா,
“எங்களைப் பற்றிய வதந்திகளை பார்க்கும் போது எங்களின் ரியாக்ஷன் இதுதான்” என்ற பகிர்வை செய்துள்ளார்.
இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மற்றும் நயன்-விக்னேஷ் ஜோடியின் ஆதரவாளர்கள் இந்த பதிலை பார்த்து நிம்மதியாகிவிட்டதாகவும், “இனி போதும் வதந்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்” என கருத்து தெரிவிக்கின்றனர்.






















