Trump Tariff: 14 நாடுகளுக்கு பறந்த கடிதம், இந்தியாவின் நிலை என்ன? யாருக்கு எவ்வளவு, 40% ஆ? - ட்ரம்பின் வரி திட்டம்
Trump Tariff: இந்தியா உடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Trump Tariff: ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு புதிய வரி விகிதம் தொடர்பான கடிதங்களை, அமெரிக்கா அரசு அனுப்பியுள்ளது.
14 நாடுகளுக்கு பறந்த வரி கடிதம்:
தென்கொரியா மற்றும் ஜப்பானில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது, 25 சதவிகிதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அந்த நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான வர்த்தக பற்றாக்குறையை குறைப்பதற்கு விதிக்க வேண்டிய அளவை காட்டிலும், மிகவும் குறைந்த அளவிலேயே வரியை விதித்து இருப்பதாக ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மியான்மர், லாவோஸ், தென்னாப்ரிக்கா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, வங்கதேசம், செர்பியா,கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய 12 நாடுகளுக்கு சரிநிகர் வரி தொடர்பான கடிதங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
ட்ரம்ப் எச்சரிக்கை:
14 நாடுகளுக்கான கடிதங்களை தனது சமூக வலைதளப்பதிவில் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். அதில், மேற்குறிப்பிட்ட நாடுகள் பதிலடி தருவதாக அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினால், ட்ரம்பின் நிர்வாகம் வரியை மேலும் உயர்த்தும் என்றும் அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் வர்த்தகம் நியாயமானதாகவும், சமநிலையானதாகவும் இருக்கும் என்றும் ட்ரம்ப் பேசியுள்ளார். புதிய வரி விகிதங்கள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட வரி விதிப்பானது பேச்சுவார்த்தைக்காக 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இது ஜூலை 9ம் தேதியுடன் காலாவதி ஆகவுள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பே இந்தக் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன.
எந்த நாட்டிற்கு எவ்வளவு வரி?
- தென்கொரியா - 25%
- ஜப்பான் - 25%
- மியான்மர் - 40%
- லாவோஸ் - 40%
- தென்னாப்ரிக்கா - 30%
- கஜகஸ்தான் - 25%
- மலேசியா - 25%
- துனிசியா - 25%
- இந்தோனேசியா - 32%
- போஸ்னியா - 30%
- வங்கதேசம் - 35%
- செர்பியா - 35%
- கம்போடியா - 36%
- தாய்லாந்து - 36%
இந்தியாவின் நிலை என்ன?
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக, அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் சீனாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், இனியும் ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என கருதப்படும் நாடுகளுக்கு தான் புதிய வரி விகிதம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளோம் என்றும் விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவுடனான சாத்தியமான ஒப்பந்தத்தின் கட்டமைப்பு அல்லது நோக்கம் குறித்த விவரங்களை அவர் வழங்கவில்லை என்றாலும், நியாயமான கவலைகள் உள்ள நாடுகளுக்கு நெகிழ்வுத்தன்மை வழங்குவது குறித்து சுட்டிக் காட்டினார். அதன்படி, "சிலர் தங்களுக்கு சரியான காரணத்தை கொண்டிருப்பதால் அவர்களுக்கான வரி விகிதம் சிறிது சரிசெய்யலாம். நாங்கள் இதில் அநியாயமாக இருக்கப் போவதில்லை" என்று ட்ரம்ப் பேசியுள்ளார். இதனால், இந்திய பொருட்களுக்கான வரி விகிதம் குறைக்கப்படலாம்.
இதுபோக, அமெரிக்காவிற்குள் உற்பத்தியை தொடங்கினால், அவர்களுக்கு அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும் என்று ஆசிய வர்த்தக கூட்டாளிகளுக்கு சலுகையும் அறிவித்துள்ளார்.
ஆட்டம் காணும் அமெரிக்க சந்தை:
தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகித வரிகளை டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை கண்டுள்ளன. டவ் ஜோன்ஸ் 456.55 புள்ளிகள் (1.02 சதவீதம்) சரிந்து 44,369.96 ஆகவும், எஸ் அண்ட் பி 500 ஆனது 53.47 புள்ளிகள் (0.86 சதவீதம்) சரிந்து 6,225.58 ஆகவும், நாஸ்டாக் காம்போசிட் 187.70 புள்ளிகள் (0.88 சதவீதம்) சரிந்து 20,413.28 ஆகவும் சரிந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.





















