மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
அமைச்சர் மூர்த்தியின் ஆதரவு பெண் மண்டலத்தலைவர் மட்டும் முதலில் ராஜினாமா கடிதம் கொடுக்காத சூழலில், 7 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் ஐந்து மண்டல தலைவர்கள் மற்றும் 2 நிலைக்குழு தலைவர்களின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரி விதிப்பில் முறைகேடு
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100-வார்டு பகுதிகளில் 3-லட்சத்திற்கு மேற்பட்ட தனியாருக்கு சொந்தமான கட்டடங்கள் உள்ளன. இதற்கான வரி வசூல் பணிகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டடங்களுக்கும் அதன் பகுதிகளுக்கு ஏற்ப வரிவிதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டும். நீதிமன்றத்தின் மூலமாகவோ அல்லது மாநகராட்சி கூட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய தீர்மானத்தின் மூலமாக முடிவெடுக்கப்படும். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக மண்டலம் 2, 3, 4, 5 ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு வரிவிதிப்பு குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 150 கோடி முதல் 200 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த விடயம் முன்னாள் ஆணையாளர் தினேஷ்குமார் விசாரணையில் வெளியே தெரியவந்தது.
அழிக்கப்பட்ட ஆவணங்கள்
முறைகேடுகள் சில மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து முறைகேடுகளை செய்துள்ளதும் தெரியவந்தது. இதற்காக வரிவிதிப்புக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டதும் தெரிவித்துள்ளது. முந்தைய ஆணையாளரால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. சைபர் கிரைம் காவல் துறையினர் வரி குறைப்பு தொடர்பான அழிக்கப்பட்ட ஆவணங்கள், குறித்து தீவிர விசாரணையை நடத்தியதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டது.
8 பேர் கைது
தொடர்ந்து தற்போதைய ஆணையர் உத்தரவின் ஒப்புதலுடன் விசாரணை வேகமெடுத்தது. இது தொடர்பாக பில் கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் என 8 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரி விதிப்பு குழு தலைவர் விஜெயலெட்சுமி மற்றும் ஐந்து மண்டல தலைவர்களிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் முதல்வர் உத்தரவின் பெயரில் அமைச்சர் நேருவும் விசாரணை நடத்தினார். இதில் நிலைக்குழு தலைவர்கள் மற்றும் மண்டல தலைவர்களிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில் மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
ராஜினாமா கடிதம் ஏற்பு
ஆனால் நேற்றுவரை முதல்வரின் உத்தரவு நிறைவேற்றப்படாமல் இருந்தது. இந்த சூழலில் தங்களை பவரை பயன்படுத்த முயற்சித்த மண்டல தலைவர்கள் சில அமைச்சர்களிடம் முட்டியுள்ளனர். ஆனால் சம்மந்தப்பட்ட அமைச்சர்களோ, இது மேல் இடத்து உத்தரவு இதில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை என கைவிரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 5 மண்டல தலைவர்கள் மற்றும் விஜயலெட்சுமி, மூவேந்திரம் ஆகிய 2 மாநகராட்சி நிலைக்குழு தலைவர்களின், ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
7 பேர் பதவி காலி
அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளரும், மண்டலம் எண் 1 தலைவருமான வாசுகி சசிக்குமார் கடிதம் அளிக்கவில்லை. கட்சி தலைமை அறிவுறுத்தியதால் நேற்று அவரும் கடிதம் அளித்துள்ளார். இந்நிலையில் அனைத்து கடிதங்களையும் மேயர் இந்திராணி ஏற்றதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் 7 பேரின் பதவி நேற்று முதல்காலியானது. அவர்களின் கவுன்சிலர் பதவி தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பான அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.




















