Thiruvarur | தந்தை துப்புரவு பணியாளர்.. மகள் நகராட்சி ஆணையர்! திருவாரூரில் அசத்தல்!
அப்பா தூய்மை பணியாளர்... மகள் நகராட்சி ஆணையர்... தொடர் முயற்சியால் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார் திருவாரூரை சேர்ந்த ஒரு துப்புரவு பணியாளரின் மகள்..
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த துப்புரவு பணியாளர் சேகரின் ஒரே மகள் துர்கா. மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து சேகரும், வீட்டு வேலைக்கு சென்று செல்வியும் பள்ளி படிப்பு முதல் கல்லூரி வரை மகள் துர்காவை படிக்க வைத்துள்ளனர். பல்வேறு சிரமங்களுக்கிடையே கணவன் மனைவி இருவரும் பொருள் ஈட்டி மகளின் கல்வி தடைபட்டு விடாமல் துர்காவிற்கு ஊக்கம் கொடுத்து அவரை பட்டப் படிப்பு வரை படிக்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் குடும்ப சூழ்நிலையால் 21 வயதில் துர்கா திருமணம் செய்துக்கொண்டுள்ளார், அவருக்கு 2 குழுந்தைகளும் பிறந்துள்ளது. ஆனாலும் அவருடைய முயற்சியிலிருந்து பின்வாங்கத துர்காவிற்கு அவருடைய கணவனும் ஊக்கமளிக்க 2016 முதல் தொடர்ந்து பலமுறை முயன்று 2023ல் குரூப் 2 முதன்மை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். எஸ்பிசிஐடி ஆவதற்கே தகுதியான மார்க் இருந்த போதிலும் தனது தந்தை தூய்மை பணியாளராக பணியாற்றிய போது பெற்ற அவமானங்கள் கஷ்டங்கள் ஆகியவற்றை சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்த துர்கா நகராட்சி ஆணையராக வேண்டும் என்று விரும்பி நகராட்சி ஆணையர் பொறுப்பை தேர்ந்தெடுத்துள்ளார்.
இதனை நேரில் பார்க்க துர்காவின் தந்தை சேகர் தற்போது இல்லையென்ற வருத்தம் ஒருபக்கம் இருந்தாலும், தடைகளை வென்று சாதிக்க துடிக்கும் பல இளைஞர்களுக்கு முன் உதாரணமாக மாறியுள்ளார் துர்கா.