Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
பாகிஸ்தானின் 6 விமானங்களை வீழ்த்தியதாக இந்திய விமானப்படை தளபதி இன்று கூறிய நிலையில், எங்களின் ஒரு விமானத்தை கூட இந்தியா தாக்கவில்லை என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.

இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய விமானப்படைத் தளபதி அமர்ப்ரீத் சிங், ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தானின் 6 விமானங்களை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக கூறினார். இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் ஒரு விமானத்தை கூட இந்திய ஆயுதப் படைகள் தாக்கவோ, அழிக்கவோ இல்லை என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
கவாஜா ஆசிஃப் கூறியது என்ன.?
இந்திய விமானப்படை தளபதியின் கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக பதிவிட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், ஒரு பாகிஸ்தான் விமான கூட இந்தியத் தரப்பில் தாக்கப்படவில்லை அல்லது அழிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
3 மாதங்களாக அத்தகைய கூற்றுக்கள் ஏதும் இந்திய தரப்பில் சொல்லப்படாத நிலையில், மோதல் முடிவுக்கு வந்த உடனேயே, சர்வதேச ஊடகங்களுக்கு பாகிஸ்தான் தரப்பில் விரிவான தொழில்நுட்ப விளக்கங்களை தாங்கள் வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் விமானங்கள் அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படை தளபதி தாமதமாக தெரிவித்த கூற்றுக்கள், சரியான நேரத்தில் செய்யப்படாதது என்றும் அவை நம்பமுடியாதவை என்றும் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆயுதப் படைகளுக்கு கட்டுப்பாட்டுக் கோட்டில் ஏற்பட்ட இழப்புகளும், விகிதாச்சாரத்தில் அதிகமாக இருப்பதாவும் அவர் கூறியுள்ளார். உண்மை கேள்விக்குறியாக இருந்தால், இரு தரப்பினரும் தங்கள் விமான பட்டியல்களை சுயாதீன சரிபார்ப்புக்கு கொண்டுவரட்டும், அப்படி செய்வது இந்தியா மறைக்க முயற்சிக்கும் யதார்த்தத்தை வெளிப்படுத்தும என்று தாங்கள் சந்தேகிப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான ஒவ்வொரு மீறலும், விரைவான, உறுதியான மற்றும் விகிதாசார பதிலை ஈர்க்கும் என்றும் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை தளபதி என்ன கூறினார்.?
பெங்களூருவில் இன்று நடந்த விமானப்படை அதிகாரிகளுக்கான கருத்தரங்கில், இந்திய விமானப்படை தளபதி ஏ.பி. சிங் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான 6 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தார். அவற்றில் 5 போர் விமானங்கள் என்றும், மற்றொரு விமானம் AWACS(Airborne Warning and Control System) என அழைக்கப்படும் வான்வழி கண்காணிப்பு மற்றும் கட்டப்பாட்டு அமைப்பு விமானம் என கூறினார்.
ஜகோபாபத் விமான தளத்தில் ஹேங்கரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எஃப்-16 ரக போர் விமானங்களும் விமானப்படை தாக்குதலில் தகர்க்கப்பட்டதாகவும் விமானப்படை தளபதி தெரிவித்தார். இந்த தாக்குதல் மிகவும் சிறப்பாக திட்டமிட்டப்பட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் விமானப்படை தளபதி ஏ.பி. சிங் பெருமிதம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது, மே 7 தாக்குதலின்போது, தீவிரவாத இலக்குகள் சேதமடைந்த செய்ற்கைக்கோள் படங்கள், அதாவது தாக்குதலுக்கு முன் மற்றும் பின் என படங்களை திரையிட்டு விளக்கமளித்தார்.





















