Govi Chezhian | ஓரங்கட்டப்பட்ட கோவி செழியன்? Udhayanidhi கொடுத்த வார்னிங்! தஞ்சை திமுக பரபரப்பு
ஓரங்கட்டப்பட்ட கோவி செழியன்? உதயநிதி கொடுத்த வார்னிங்! தஞ்சை திமுக பரபரப்பு!
கோவி செழியனை அமைச்சராக்கியதை தஞ்சாவூர் திமுக வட்டாரத்தில் விரும்பவில்லை என்றும் அவரை யாரும் மதிக்கவில்லை என்றும் பேச்சு அடிபட்டது. இதனை நேரிலேயே பார்த்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக நிர்வாகிகளை கண்டித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
”எங்கள் மாவட்டத்தில் இருந்தும் ஒரு அமைச்சர் கொண்டு வர வேண்டும்” என்று தஞ்சாவூரில் இருந்து திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே குரல் எழுந்து வருகிறது. அதேபோல் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு பெரிய இலாகாக்களை ஒதுக்குவதில்லை என்றும் திமுகவை நோக்கி விமர்சனம் வைக்கப்பட்டது. இதற்கெல்லாம் கடந்த அமைச்சரவை மாற்றத்தில் முற்றுப்புள்ளி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கோவி.செழியனை அமைச்சர் ஆக்கி, அவருக்கு உயர்கல்வித் துறை என்ற முக்கியமான இலாக்காவையும் ஒதுக்கி அதிரடி காட்டினார்.
ஆனால் கோவி செழியனை மாவட்ட நிர்வாகிகள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று பேச்சு ஆரம்பமானது. உயர்கல்வித்துறை அமைச்சராகி அவர் தனது சொந்த மாவட்டத்திற்கு சென்ற போது நிர்வாகிகள், தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர் கோவி செழியன் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தாலும் எம்.எல்.ஏக்களும் திமுக நிர்வாகிகளும் அவரை காக்க வைக்கும் விதமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. திருவையாறு எம்.எல்.ஏ துரை சந்திரசேகர், தஞ்சை எம்.எல்.ஏ டி.கே.ஜி நீலமேகம், கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என நினைத்த நிர்வாகிகள் கோவி செழியனுக்கு கிடைத்ததால் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் திமுக தலைமை வரை சென்றுள்ளதாக தெரிகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் வந்திருந்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் கோவி செழியனிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என உன்னிப்பாக கவனித்து வந்துள்ளார். அப்போது அமைச்சருக்கு உரிய மரியாதை வழங்கப்படாமல் இருப்பதையும், கட்சி நிகழ்ச்சிகளில் அவர் ஓரங்கப்படுவதையும் பார்த்தாக தெரிகிறது.
அதனால் நிர்வாகிகளை அழைத்து உதயநிதி ஸ்டாலின் கண்டித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் என்ற பெரிய பொறுப்பில் இருக்கும் கோவி செழியனுக்கு மரியாதை கொடுக்க வேண்டியது உங்கள் கடமை, இல்லை அவரை மாவட்ட செயலாளர் ஆக்கினால் தான் மரியாதை கொடுப்பீர்களா என காட்டமாக பேசியதாக சொல்கின்றனர். இனியும் இந்த நிலை தொடர்ந்தால் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என பேசியதால் திமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.