துரோகிக்கு ம.செ பதவியா ? திமுக B.- டீம்.. ராமதாஸ் முடிவுக்கு எதிராக கொதிக்கும் காஞ்சிபுரம் பாமக
காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் மாற்றப்பட்டதற்கு, காஞ்சிபுரம் மாவட்ட பாமகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் மோதல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அன்புமணியை செயல் தலைவர் என ராமதாஸ் அறிவித்ததில் இருந்து, நீர் பூத்த நெருப்பாக இருந்து வந்தது. வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்ற பிறகு, இந்த பிரச்சனை தீரும் என நிர்வாகிகள் நம்பி இருந்தனர்.
நிர்வாகிகளை நீக்கும் ராமதாஸ்
இந்தநிலையில், அந்தப் பிரச்சினை தொடர்ந்து தீராமல் அடுத்த கட்டங்களுக்கு உருவெடுக்க தொடங்கி இருக்கிறது. கட்சி நிர்வாகிகளை நீக்கும் எண்ணம் இல்லை என ராமதாஸ் ஒருபுறம் பேட்டி கொடுத்துவிட்டு, அதற்கு அடுத்த நாட்களில் புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்து வருகிறார். இதுவரை 94 நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக, பெ. மகேஷ் குமாருக்கு பதில் சாலவாக்கம், ஸ்ரீதர் என்பவரை ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். இந்தநிலையில் பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ், மகேஷ் குமார் மீண்டும் மாவட்ட செயலாளராக தொடர்வார் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கொந்தளிக்கும் பாமகவினர்
இந்தநிலையில் இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட பாமகவினரிடம் தொடர்பு கொண்டு விசாரித்தோம் : மருத்துவர் அய்யா எப்போதுமே மகேஷ் குமார் மீது நல்ல மதிப்பு வைத்திருந்தவர். மருத்துவர் அய்யா சொல்வதை வேத வாக்கு எனவும் மகேஷ்குமார் செய்து வந்தார். ஆனால் அய்யாவின் இந்த முடிவு சரி கிடையாது என தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரத்தில் திமுக மற்றும் அதிமுகவின் செயல்பாடுகளில் மீறி, பாமகவை வளர்த்து எடுத்திருக்கிறார். 2016 இல் பாமக தனித்து நின்ற போது, மகேஷ் குமார் காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு 14% வாக்குகளை பெற்றார். பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தியுள்ளார். அய்யா நடத்திய தமிழை தேடி பயணத்திற்கான வாகனத்தை ஏற்பாடு செய்து, அதற்கான முழு செலவை ஏற்றுக் கொண்டதும் மகேஷ் தான். இப்படி இருக்கும்போது அவரை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியது, எந்த விதத்திலும் சரியில்லை என பாமகவினர் புலம்புகின்றனர்.
தலைவரின் முடிவே இறுதியானது
ஆனால் தலைவரின் அறிவிப்பின் அடிப்படையில், அவரே மாவட்ட செயலாளராக தொடர்வார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். மருத்துவரை யாரோ ஒருவர் இயக்குகின்றனர், அதனால் தான் இப்படி நடப்பதாகவும் புலம்பித் தள்ளுகின்றனர். அதுவும் "திமுகவின் B- டீம், திமுகவில் இருந்தவருக்கு மாவட்ட செயலாளர் பதவியை கொடுத்திருக்கிறது". சட்டப்படி மாவட்ட செயலாளரை நியமிக்கும் அதிகாரம் தலைவருக்கே உள்ளது.
கட்சியின் துரோகிகள்
ஸ்ரீதர் போன்ற கட்சியின் துரோகிகளை அடையாளப்படுத்தி வரலாற்று பிழை மருத்துவர் செய்துள்ளார். 2016 முன்பு பாமக ஊராட்சிமன்ற தலைவர், 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக, 2019 நாடாளுமன்ற மீண்டும் பாமக, 2021 மனுதாக்கல் வரை பாமக,மனு தாக்கலுக்குபின் திமுக, இப்படிப்பட்டவரை அய்யா அங்கீகரித்திருப்பது, யார் தோட்டத்திற்கு சென்றாலும் பதவி கிடைத்து விடும் போல என்ற நிலை உள்ளது. சூழ்ச்சியில் சிக்கி இருக்கும் மருத்துவர் அய்யாவை, தலைவர் அன்புமணி ராமதாஸ் மீட்டெடுக்க வேண்டும் என பாமகவினர் புலம்பி வருகின்றனர்.
ஏற்கனவே பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் பணம் வாங்கிக்கொண்டு நிர்வாகிகளுக்கு பதவி கொடுத்து வருவதாக பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், அதே குற்றச்சாட்டை காஞ்சிபுரம் மாவட்ட பாமகவினரும் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.





















