சசிகலா பரபரப்பு பேச்சு: வரி உயர்வு, பாலியல் குற்றச்சாட்டு, 2026 தேர்தல் குறித்தும் அதிரடி கருத்து!
காசவளநாடு கோவிலூரில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் பங்குனி உத்திர பிரமோத்சவத்தின்போது தேரோட்டம் நடந்தது. அதன்பிறகு தேர் பழுதானதால் தேரோட்டம் நடைபெறவில்லை.

தஞ்சாவூர்: திமுக ஆட்சிக்கு வரும்போது வீட்டு வரி, மின்சார வரி உயர்த்துவது வழக்கம். கடந்த 2008ம் ஆண்டில் உயர்த்தப்பட்ட வரிகள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் உயர்த்தப்படவில்லை. இப்போது சதுர அடி கணக்கில் வரி இரட்டிப்பாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி இருக்கக்கூடாது. அதற்கான வேலைகளை செய்து வருகிறேன் என்று வி.என்.சசிகலா நடராஜன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் அருகே காசவளநாடு கோவிலூரில் நேற்று மாலை புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா நடராஜன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
காசவளநாடு கோவிலூரில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் பங்குனி உத்திர பிரமோத்சவத்தின் போது தேரோட்டம் நடந்தது. அதன்பிறகு தேர் பழுதானதால் தேரோட்டம் நடைபெறவில்லை.

இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து பங்குனி உத்திர பிரமோற்சவ தேரோட்டம் நடத்த கோயில் நிர்வாகம் மற்றும் காசவளநாட்டார்களால் முடிவு செய்யப்பட்டது. பின்னர் புதிய தேருக்கான செலவினை வி.கே.சசிகலா நடராஜன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
கடந்த சில மாதங்களாக புதிய தேர் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தது. தேர் வெள்ளோட்டத்துக்கான விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் முதலாம் கால யாகசாலை பூஜையும், நேற்று காலை 2ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. பின்னர் நேற்று மாலை 4.35 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தேர் வடம்பிடிக்கப்பட்டது. இதில் வி.கே.சசிகலா நடராஜன் கலந்து கொண்டு தேர் வடம்பிடித்து இழுத்து தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து கோயிலை சுற்றி நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்து பின்னர் நிலையை அடைந்தது. பின்னர் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை காசவளநாட்டைச் சேர்ந்த 18 கிராமத்தினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் இணைந்து செய்திருந்தனர்.
தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சிக்கு பின்னர் வி.என்.சசிகலா நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: கூட்டணிக்கு முன்பு கட்சிகள் எதிரும், புதிருமாக இருக்கும். ஒரு நாள் மேடையில் ஒன்றாக நின்று தேர்தல் கூட்டணி எனக் கூறுவர். இது, எப்போதுமே தேர்தலுக்கு மட்டுமே உள்ள கூட்டணிதான். தங்களுடைய கூட்டணி வெற்றி பெற வேண்டும் என ஒவ்வொருவரும் நினைப்பார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை வெளியே வந்துள்ளது. இன்னும் நிறைய சார் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிட்லபாக்கத்தில் சமூக நலத் துறை நடத்தும் பெண்களுக்கான காப்பகத்தில் 13 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. அங்கு கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை.
எங்கெங்கு காப்பகம் உள்ளதோ, அந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தின் கண்காணிப்பு அவசியம் தேவை. திருப்பூர், நாமக்கல், ஈரோட்டில் முதியவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இதற்கு காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வர் பதில் அளிக்க வேண்டும். வருகிற 2026 தேர்தலில் இதற்கு சரியான பாடம் கிடைக்கும்.
திமுக ஆட்சிக்கு வரும்போது வீட்டு வரி, மின்சார வரி உயர்த்துவது வழக்கம். கடந்த 2008ம் ஆண்டில் உயர்த்தப்பட்ட வரிகள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் உயர்த்தப்படவில்லை. இப்போது சதுர அடி கணக்கில் வரி இரட்டிப்பாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி இருக்கக்கூடாது. அதற்கான வேலைகளை செய்து வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





















