Siddaramaiah DK Shivakumar Delhi | சித்தராமையாவுக்கு கல்தா! சிவகுமாருக்கு PROMOTION! ராகுல் அதிரடி
கர்நாடக காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அடுத்தடுத்து புகார் வரும் நிலையில், முதல்வர் சித்தராமையாவையும், துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரையும் டெல்லிக்கு அழைத்துள்ளது காங்கிரஸ் தலைமை. முதல்வர் பதவியில் மாற்றம் இருக்குமா என பரபரப்பு பேச்சு ஆரம்பமாகியுள்ளது.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்றது முதலே முதல்வர் பதவியை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் வலம் வந்தன. முதல்வர் ரேஸில் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாரும் இருந்தனர். ஆனால் அந்த பதவி சித்தராமையா கைகளுக்கு சென்றதால் டி.கே.சிவக்குமார் தரப்பு அதிருப்தி அடைந்தது. சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டாலும் கட்சிக்குள் 2 தரப்பாக பனிப்போர் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதனால் வேலைகள் எதுவும் ஒழுங்காக நடப்பதில்லை என தலைமைக்கும் புகார் சென்றுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்து ஊழல் புகாரில் சிக்கி வருகிறது ஆளும் காங்கிரஸ். மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் மற்றும் வால்மீகி பழங்குடியின மேம்பாட்டு ஆணையத்தில் நிதி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. மேலும் சித்தராமையா மனைவிக்கு 14 மனைகள் சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த பிரச்னைகளை வைத்து காங்கிரஸுக்கு எதிராக போராட்டங்களை கையில் எடுத்துள்ளது கர்நாடக பாஜக.
இந்தநிலையில் சித்தராமையாவைவும், டி.கே.சிவக்குமாரையும் டெல்லிக்கு அழைத்துள்ளது காங்கிரஸ் தலைமை. முதலமைச்சர் பதவியில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இல்லையென்றால் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மற்றொரு பக்கம், சித்தராமையாவையும், டி.கே.சிவக்குமாரையும் கண்டிப்பதற்காக தான் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி டெல்லிக்கு அழைத்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. உங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை ஓரம் வைத்து விட்டு கட்சிப் பணிகளை பார்க்க வேண்டும் என அறிவுறுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆட்சியில் இருக்கும் பிரச்னைகளை சரிகட்ட என்னவெல்லாம் செய்யலாம் என்றும் ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.