Trump on TIKTOK: சீனா அந்த விஷயத்த பண்ணா வரிய குறைக்கறேன்.. ட்ரம்ப் போட்ட ‘அந்த‘ கன்டிஷன் என்ன.?
சீனா ஒரு விஷயத்தை செய்தால், அவர்களுக்கு வரியில் கொஞ்சம் சலுகை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவுக்கு அவர் போட்ட கன்டிஷன் என்ன தெரியுமா.?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடிகளுக்கு பெயர் போனவர் என்பது தெரியும். அந்த வரிசையில், சீனாவிற்கு வரிச் சலுகை வழங்க, செம்மையான டீல் ஒன்றை அறிவித்துள்ளார் ட்ரம்ப். அதற்கு சீனா ஒப்புக்கொண்டால், வரியில் சிறிது சலுகை அளிக்கப்படும் என அதிரடியாக அவர் தெரிவித்துள்ளார். அவர் அப்படி என்ன கூறியுள்ளார்.? பார்க்கலாம்.
அதிபராக பதவியேற்ற உடன் ‘டிக்டாக்‘ தடையை நீக்கிய ட்ரம்ப்
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்தபோது, டிக்டாக் செயலிக்கு தடை விதித்தார். சீன நிறுவனத்தின் செயலியான டிக்டாக் மூலம், அமெரிக்கர்களை சீனா உளவு பார்ப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், டிக்டாக் செயலியை தடை செய்யும் உத்தரவை நிறுத்தி வைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். அதன்படி, டிக்டாக் செயலியை தடை செய்வது 75 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
அமெரிக்க சட்டப்படி, அமெரிக்காவில் டிக்டாக் செயலி செயல்படவேண்டும் என்றால், அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு அதன் பங்குகளை விற்க வேண்டும். அதன்படி, 50 சதவீத பங்குகளை சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் விற்க வேண்டும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். அப்படி அந்த நிறுவனம் பங்குகளை விற்கும் பட்சத்தில், டிக்டாக் செயலியை எலான் மஸ்க் வாங்க வேண்டும் என்று விரும்பினால், அவர் வாங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் ட்ரம்ப் அப்போது தெரிவித்திருந்தார்.
டிக்டாக்கை விற்க ஒப்புக்கொண்டால் வரிச் சலுகை - ட்ரம்ப்
இந்த நிலையில், தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ட்ரம்ப். அதன்படி, டிக்டாக் டீலுக்கு சீனா ஒப்புக்கொண்டால், அந்நாட்டிற்கு சிறிது வரிச் சலுகை வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம், ஏப்ரல் 5-ம் தேதிக்குள் தங்கள் நிறுவனத்தின் குறிப்பிட்ட அளவு பங்குகளை அமெரிக்காவில் உள்ள சீன உரிமை இல்லாத ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு விற்றாக வேண்டும். இல்லையென்றால், அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடை செய்யப்படும்.
இந்நிலையில், இது குறித்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், ஏப்ரல் 5-ம் தேதிக்குள் ஏதாவது ஒரு வகையில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டால், தடைக்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக தெரிவித்துள்ளார். சீனா நிச்சயம் ஏதாவது செய்தாக வேண்டும், குறைந்தபட்சம், பங்குகளை விற்பதற்கான ஒப்புதலையாவது அவர்கள் தெரிவிப்பார்கள் என்று நினைப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, பெர்ப்லெக்சிட்டி என்ற அமெரிக்க ஏஐ நிறுவனம் டிக்டாக் நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனத்தில் ஏஐ தேடல் தொழில்நுட்பத்தை, டிக்டாக்கின் வீடியோ பகிர்வு இணையதளத்துடன் இணைக்கும் திட்டத்தை சமீபத்தில் தங்கள் பதிவு ஒன்றின் வாயிலாக தெரிவித்துள்ளனர். ஆனால், சீன நிறுவனம் இதுகுறித்து என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதே, தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.