Court Judges: பெரியார் சொன்னது பலித்தது? நீதிமன்றங்கள் யார் வசம்? நீதிபதிகள் நியமனத்தின் ஷாக்கிங் தகவல்
Court Judges: நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Court Judges: கடந்த 5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளில், 77 சதவிகிதம் பேர் உயர்சாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் நியமனம்:
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாக எரிந்த நிலையில் பணம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் ஓயவில்லை. அதன் தொடர்ச்சியாக நீதித்துறையில் உள்ள பன்முகத்தன்மை குறித்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் குமார் ஜா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய சட்ட அமைச்சர் அர்ஜுன் குமார் மேக்வால், கடந்த 2018ம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்ட சாதி வாரியான நீதிபதிகளின் விவரங்களை வெளியிட்டார். 2018 முதல், உயர் நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரைக்கப்படுபவர்கள் தங்கள் சமூக பின்னணி குறித்த விவரங்களை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தகக்து.
”உயர்சாதியினருக்கே முக்கியத்தும்”
மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2018 முதல் நியமிக்கப்பட்ட அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 77 சதவீதத்திற்கும் அதிகமானோர் (715 பேரில் 551 பேர்) உயர் சாதியினரைச் சேர்ந்தவர்கள் (பொதுப் பிரிவு) ஆவார். அவர்களுடன் ஒப்பிடுகையில், தோராயமாக 3 சதவீதம் பேர் பட்டியல் சாதி (SC) பின்னணியைச் சேர்ந்தவர்கள், 2 சதவீதம் பேர் பட்டியல் பழங்குடியினர் (ST), 12 சதவீதம் பேர் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் 5 சதவீதம் பேர் "சிறுபான்மையினர்" ஆவர்.
அதாவது 2018 முதல் நியமிக்கப்பட்ட 715 உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 22 பேர் எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்கள், 16 பேர் எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள், 89 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், 37 பேர் சிறுபான்மையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் நியமனம் நடப்பது எப்படி?
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உயர் நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு இடஒதுக்கீடு எதையும் வழங்கவில்லை. நீதிபதிகள் நியமனத்திற்கான முன்மொழிவுகளைத் தொடங்குவதற்கான பொறுப்பு" இந்திய தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளிடம் உள்ளது . மேலும், உச்ச நீதிமன்றக் கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் மட்டுமே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.
அதேநேரம், ”நியமனத்திற்கான முன்மொழிவுகளை அனுப்பும்போது, "பட்டியல் சாதியினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களைச் சேர்ந்த பொருத்தமான வேட்பாளர்களுக்கு உரிய கவனம் செலுத்த வேண்டும்" என்று உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளைக் கேட்டுக்கொண்டிருப்பதாக மேக்வால் தெரிவித்துள்ளார்.
பெரியார் சொன்னது என்ன?
”நாம் போராடி சட்டங்கள் கொண்டுவரும் நாளில் நீதிமன்றத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான்” என ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது பெரியார் குற்றம்சாட்டி இருந்தார். அதனை உண்மை என்பதை உணர்த்தும் விதமாக தான், தற்போது நீதிபதி நியமனங்கள் தொடர்பான தரவுகள் அமைந்துள்ளன. நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு தேவை என்ற திமுக போன்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கை அவசியமானது என, இந்த தரவுகள் காட்டுகின்றன என அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் ஏழ்மையான பின் தங்கிய சமூக மக்களுக்கு சரியான நீதி கிடைக்காது எனவும், இதன் காரணமாகவே மத்திய அரசு சாதிவாரி பிரதிநிதித்துவம் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பை தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.





















