EPS Amit Shah: இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று டெல்லி சென்ற நிலையில், அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தாமாக கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணியை அமித்ஷா உறுதிசெய்துள்ளதாகவும் வெளியாகி உள்ள தகவல் தமிழக அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.
தமிழ் நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி வருகிறது, மறுபுறம் வலுவான கூட்டணியை அமைக்க அதிமுக பக்கா ஸ்கெட்ச் போட்டு வருகிறது. இவர்களுக்கு போட்டியாக தவெகவும் இப்போதே கூட்டணி கணக்குகளை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக நாடளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே கூட்டணியில் இருந்து பிரிந்தது. இச்சூழலில் தான் மீண்டும் பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் ஏற்ப்பட்டிருக்கிறது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில் தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி சென்ற அவரை தம்பிதுரை , சிவி சண்முகம் ஆகியோர் வரவேற்றனர். எடப்பாடி முன்னே செல்ல முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி , கேபி முனுசாமி ஆகியோரும் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக டெல்லியில் கட்சி அலுவலகத்தை பார்ப்பதற்காகவே இபிஎஸ் வந்ததாக அதிமுக தரப்பில் கூறப்பட்டது. அதே நேரம் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கூட்டணி கணக்கு குறித்து பேச உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தான் டெல்லியில் உள்ள அமித்ஷா இல்லத்தில் அவரை சந்தித்து பேசியுள்ளார் இபிஎஸ். இந்த சந்திப்பின் போது அடுத்தாண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது, அதேபோல், இந்த கூட்டணியில் பாமக, தேமுதிக, தாமாக, புதிய தமிழகம் கட்சியும் இருக்கும் என்று இபிஎஸ் கூறியதாகவும் அதற்கு அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.





















