DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகி
மழை வெள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்கள் வழங்கியபோது, பெண்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பேரூராட்சி துணைத்தலவர் தனபால் பெண்கள் மீது கைவைத்து தள்ளியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கனமழையால் தர்மபுரி மாவட்டம் அரூர் ஒட்டியுள்ள வாணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனால் மக்கள் உடனடியாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், போர்வை அடங்கிய நிவாரண பொருட்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். உதயநிதி காரில் வரும் போதே மனுக்களை கொடுப்பதற்காக குவிந்தனர். முகாமிற்குள் நுழையும் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உதயநிதி நிவாரண பொருட்களை கொடுத்துக் கொண்டிருக்கும் போதே மக்கள் முண்டியடித்துக் கொண்டு போலீசாரையும் மீறி உள்ளே வர பார்த்தனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். உதயநிதி முகாமில் இருந்து கிளம்பிய உடனேயே பெண்கள் போர்வையை இழுத்து சென்றதால் காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் சத்தமிட்டனர்.
அப்பொழுது பேரூராட்சி துணைத் தலைவர் தனபால் திடீரென பெண்கள் கையில் இருந்த போர்வைகளை பிடுங்கி வைத்துக்கொண்டு, பெண்களை நெஞ்சின் மீது கை வைத்து தாறுமாறாக பிடித்து தள்ளினார்.
இதனால் நிவாரண உதவி பெற வந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.