IND Vs ENG Test: வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில், 427 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதன் மூலம், இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே, 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில், தனது 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 427 ரன்களை குவித்து டிக்ளேர் செய்துள்ளது. இதன் மூலம், முதல் இன்னிங்ஸ் முன்னிலை ரன்களையும் சேர்த்து, இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் இலக்காக நிர்ணியிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்கத்திலேயே 2 ரன்களில் ஆட்டமிழந்து கே.எல். ராகுல் அதிர்ச்சி கொடுத்தார். மறுமுனையில் ஜெய்ஷ்வால் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார். ராகுலை தொடர்ந்து களமிறங்கிய கருண் நாயர் 31 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். இதைத் தொடர்ந்து ஆடவந்த சுப்மன் கில் நிதானமாகவும், அபாரமாகவும் ஆடினார்.
இதற்கிடையே 87 ரன்கள் எடுத்த நிலையில் ஜெய்ஷ்வால் ஆட்டமிழக்க, பண்ட் களமிறங்கினார். அவர் 25 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த நிதிஷ் ரெட்டியோ 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதைத் தொடர்ந்து, சதமடித்து அபாரமாக ஆடிவந்த கேப்டன் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா, சிறப்பாக ஆடினார். அவர் 89 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தர் அவர் பங்கிற்கு 42 ரன்கள் சேர்த்தார். இதனிடையே, அபாரமாக ஆடி இரட்டை சதமடித்து ஆடிவந்த சுப்மன் கில், 269 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது இந்திய அணி.
இங்கிலாந்து தரப்பில், பஷீர் 3 விக்கெட்டுகளையும், வோக்ஸ், ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டுகளையும் குவித்தனர்.
இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ்
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணிக்கு, தொடக்கமே அதிர்ச்சியாகத் தான் இருந்தது. துவக்க ஆட்டக்காரர்கள் டக்கெட் ரன் எடுக்காமலும், க்ராவ்லே 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதைத் தொடர்ந்து போப் ரன் ஏதும் எடுக்காமலும், ஜோ ரூட் 22 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். இதையடுத்து வந்த ஹாரி ப்ரூக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனிடையே பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, ப்ரூக்குடன் ஜேமி ஸ்மித் ஜோடி சேர்ந்தார். அவர்கள் இருவரும் சதம் விளாசி இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்நிலையில், ஹாரி ப்ரூக் 158 ரன்களில் ஆட்டமிழக்க, அதன் பின் வந்த வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். இறுதியில், ஸ்மித் மட்டும் 184 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 407 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது.
இந்திய தரப்பில், அற்புதமாக பந்துவீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸ்
இதைத் தொடர்ந்து, 180 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை ஆடிய நிலையில், தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஷ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஓரளவு சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். ஜெய்வால் 28 ரன்களில் ஆட்டமிழந்து, கருண் நாயர் களமிறங்கிய நிலையில், 3-ம் நாள் இறுதியில், 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை சேர்த்திருந்தது இந்திய அணி.
இன்று 4-வது நாளில், 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய இந்திய அணியில், கருண் நாயர் மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்து 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து, கேப்டன் சுப்மன் கில் களத்திற்கு வந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கருண் நாயரைத் தெடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட், தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அவர் 58 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜடேஜா களமிறங்கினார்.
இந்நிலையில், மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த கில் சதத்தை நிறைவு செய்து, இந்திய டெஸ்ட் வரலாற்றில் சாதனை படைத்தார். தொடர்ந்து 161 ரன்களில் கில் ஆட்டமிழக்க, அதன் பின் வந்த நிதிஷ் 1 ரன்னிர் அட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். இதனிடையே, ஜடேஜா தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இந்நிலையில், ஜடேஜா 69 ரன்களும், சுந்தர் 12 ரன்களும் எடுத்திருந்த நிலையில், 427 ரன்களுக்கு இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸ்
இதைத் தொடர்ந்து, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முன்னிலையையும் சேர்த்து, 608 ரன்கள் வெற்றி இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் க்ராவ்லே, சிராஜின் பந்தில் கேட்ச் கொடுத்து, டக் அவுட் ஆகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து, அதிரடியாக ஆடிவந்த பென் டக்கெட், 15 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆகாஷ் தீப்பின் பந்தில் போல்டாகி வெளியேறினார்.
அதைத் தொடர்ந்து போப் மற்றும் ரூட் ஆடிவருகின்றனர்.




















