முருகன் கோவிலில் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுப்பு! தமிழிசைக்கு அனுமதி.. வெடித்த சர்ச்சை
தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வல்லக்கோட்டை முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசைக்கு அனுமதி அளிக்கப்பட்ட போது செல்வப்பெருந்தகைக்கு மட்டும் அனுமதி அளிக்காதது ஏன் என்ற கேள்விகள் எழுந்து விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
வல்லக்கோட்டை முருகன் கோவில்
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் சுமார் 2000 ஆண்டுகள் பழமைபெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வல்லக்கோட்டை முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த கோவில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் வருவதால் இந்த விழாவில் எம் எல் ஏவும் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்.
ஆனால் அவரை குடமுழுக்கு நடைபெறும் இடத்திற்குள் அனுமதிக்காமல் அறநிலையத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுப்பு:
குடமுழுக்கு முடிந்த பிறகு மூலவர் விமானத்தில் நன்னீராட்டு செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட்டிருந்த பகுதிக்கு பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை அனுமதி வழங்கிய நிலையில், அதன்பிறகு வந்த செல்வப்பெருந்தகையை மேலே இடமில்லை என கூறி அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனால் கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில், செல்வப்பெருந்தகைக்கு அங்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழிசைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், செல்வப்பெருந்தகையை மட்டும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது ஏன் சாதி ரீதியான பாகுபாடுகள் தான் காரணமா என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
செல்வப்பெருந்தகை பேட்டி:
இந்த் சம்பவம் குறித்து பேட்டியளித்த "வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கச் சென்றபோது, அறநிலையத்துறை அதிகாரிகள் என்னை தடுத்து நிறுத்தினர். ஆனால், பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜனுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது. இது பகிரங்கமான பாகுபாடு சிறிது நேர வாக்குவாதத்திற்கு பிறகு தான் அவர்கள் என்னை வழிபட அனுமதித்தனர். இந்த அணுகுமுறை முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல," என்று வேதனையுடன் தெரிவித்தார்.
மனதளவில் பாதிப்பு:
அறநிலையத்துறை அதிகாரிகள் சிலர் ஆகம விதிகளை காரணம் காட்டி, தீட்டு கடைபிடிப்பதாக கூறியதாகவும், இது தன்னை மனதளவில் பாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறுகையில், "கோயில் விழாக்களில் இது போன்ற பாகுபாடு 2,000 ஆண்டு காலமாக நீடித்து வருகிறது. தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் சமூகநீதிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், சில அதிகாரிகள் இந்த கொள்கைகளை சரியாக பின்பற்றுவதில்லை. இந்து சமய அறநிலையத்துறை, அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். எனக்கு நேர்ந்த இந்த அவமதிப்பு, சமூகநீதியை மீறுவதாக உள்ளது." என்று செய்தியாளர் சந்திப்பில் வேதனையுடன் பேசி இருந்தார்.






















