IPL 2022: பும்ரா டூ ரஸல்- 2022 ஐபிஎல் தொடரில் பதிவான டாப் 5 சிறப்பான பவுலிங் ஸ்பெல்கள்..
2022 ஐபிஎல் தொடரில் சிறப்பாக அமைந்த டாப்-5 பந்துவீச்சுகள் என்னென்ன?
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் மோத உள்ளன. நடப்பு ஐபிஎல் தொடர் மற்ற தொடர்களை போல் சற்று சுவாரஸ்யம் குறைந்து இருந்தாலும் அதில் சில விஷயங்கள் சிறப்பாக அமைந்தது. பந்துவீச்சாளர்கள் சிலர் சிறப்பாக பந்துவீசி எதிரணியின் ஆட்டக்காரர்களை திணறடித்தனர்.
அந்தவகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பதிவான சிறப்பான பந்துவீச்சுகள் என்னென்ன?
ஆண்ட்ரே ரஸல்(4/5):
நடப்புத் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது ஆட்டத்தின் கடைசி ஓவரை ரஸல் வீசினார். அந்த ஒரே ஓவரில் 5 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து அவர் 4 விக்கெட் எடுத்து அசத்தினார். ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஓவர் மட்டும் வீசி 4 விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
யுஸ்வேந்திர சாஹல்(40/5):
கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் சாஹல் சிறப்பாக பந்துவீசினார். அவர் 4 ஓவர்கள் வீசி 40 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.
உம்ரான் மாலிக்(25/5):
2022 ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசிய வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர் உம்ரான் மாலிக். தன்னுடைய வேகத்தின் மூலம் அவர் எதிரணியை திணறடித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் வீரர் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்துவீசினார். அவர் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி வேகத்தில் மிரட்டினார்.
வணிந்து ஹசரங்கா(5/18):
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு நடப்புத் தொடரில் சிறப்பாக பந்துவீசியவர் இலங்கையின் வணிந்து ஹசரங்கா. இவர் இம்முறை 16 போட்டிகளில் 26 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தார். இவர் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஜஸ்பிரீத் பும்ரா(5/10):
மும்பை இந்தியன்ஸ் அணி 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மிகவும் மோசமானதாக அமைந்தது. எனினும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஒரு சில போட்டிகளில் சிறப்பாக பந்துவீசினார். குறிப்பாக அவர் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் நடப்புத் தொடரின் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார். அவர் 4 ஓவர்கள் வீசி வெறும் 10 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் எடுத்து மிரட்டினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்