Sheikh Hasina: 6 ஆண்டுகள் டெல்லி ரகசிய வாழ்க்கை, படுகொலை செய்யப்பட்ட குடும்பம், ஷேக் ஹசீனா கடந்து வந்த பாதை
Sheikh Hasina: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, ஏற்கனவே இந்தியாவில் 6 ஆண்டுகள் ரகசியமாக வாழ்ந்தது பற்றி இந்த தொகுப்பில் அறியலாம்.
Sheikh Hasina: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டபோது, அவர் இந்தியாவிலேயே தஞ்சமடைந்தார்.
இந்தியாவில் தஞ்சமடந்த ஷேக் ஹசீனா:
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பெரும் எதிர்ப்புகள் மற்றும் வன்முறைக்கு மத்தியில் தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அதன்படி, டெல்லியில் தஞ்சமடைந்துள்ள அவர், சிறிது நாட்கள் இங்கேயே தங்கியியிருந்து பிறகு இங்கிலாந்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைவது என்பது இது முதல்முறையல்ல. ஏற்கனவே அவர் இந்தியாவில் 6 ஆண்டுகள் ரகசியமாக வாழ்ந்துள்ளார்.
6 ஆண்டுகள் டெல்லியில் வசித்த ஷேக் ஹசீனா:
கடைசியாக 1975 ஆம் ஆண்டு தனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் உட்பட தனது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டபோதும், பதற்றமான சூழலுக்கு மத்தியிலும் ஹசீனா இந்தியாவிலேயே தஞ்சமடைந்து இருந்தார். 1975 முதல் 1981 வரை ஆறு வருடங்களாக டெல்லியின் பண்டாரா சாலையில், தனது கணவர், குழந்தைகள் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார். முதலில் டெல்லியில் 56 ரிங் ரோடு, லஜ்பத் நகர்-3 இல் வசித்து வந்த ஹசீனா, பின்னர் லுடியன்ஸ் டெல்லியின் பண்டாரா சாலையில் உள்ள வீட்டிற்கு மாறினார்.
இந்தியாவில் தஞ்சமடைய காரணம் என்ன?
ஆகஸ்ட் 15, 1975 இல், ஷேக் ஹசீனாவின் தந்தையும், வங்கதேச தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மான், புதிய அதிபராக பதவியேற்ற சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 18 பேருடன் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் வங்கதேசம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாட்டை அரசியல் கொந்தளிப்பு மற்றும் ராணுவ ஆட்சிக்குள் தள்ளியது.
இதையடுத்து,பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேசத்தின் விடுதலைப் போரில் முக்கிய பங்காற்றிய நாடான இந்தியாவில் தஞ்சம் புகுவதைத் தவிர வேறு வழியின்றி, ஜெர்மனியில் இருந்த ஷேக் ஹசீனா இந்தியா வந்தடைந்தார். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, ஹசீனாவுக்கு உதவிக் கரம் நீட்டி பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் அளித்தார். அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் கடுமையான பாதுகாப்பில் வாழ்ந்தனர்.
நாடு திரும்பி ஆட்சியை பிடித்த ஷேக் ஹசீனா:
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மே 17, 1981 அன்று, ஹசீனா தனது தாயகமான வங்கதேசத்திற்கு திரும்பினார். அங்கு அவர் அவாமி லீக்கின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே, அவர் நாடு திரும்பியது என்பது, ராணுவ ஆட்சிக்கு எதிரான நீண்ட மற்றும் கடினமான ஹசீனாவின் போரின் தொடக்கமாக அமைந்தது. ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறைவாசம் உட்பட பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், ஹசீனா விடாமுயற்சியுடன் போராடி, 1996ம் ஆண்டு முதன்முறையாக வங்கதேசத்தின் பிரதமரானார். அதைதொடர்ந்து, ஒருநாட்டிற்கு நீண்டகாலமாக பிரதமராக இருந்த பெண் என்ற பெருமையை பெறும் அளவிற்கு பெருஞ்சாதனைகள் படைத்தார். ஆனால், மீண்டும் வெடித்த ஒரு கலவரம் காரணமாக, ஷேக் ஹசீனா இரண்டாவது முறையாக இந்தியாவில் தஞ்சம்டைந்துள்ளார்.