Jasprit Bumrah: இந்தியாவிற்கு பிரச்னையாகும் பும்ரா? காணாமல் போன வேகம், கழற்றிவிட்டு ஆகாஷ் தீபிற்கு வாய்ப்பா?
Jasprit Bumrah: நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விக்கெட்டுகளை வீழ்த்தாதது, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Jasprit Bumrah: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓவல் டெஸ்டில் பும்ராவிற்கு பதிலாக, ஆகாஷ் தீப் களமிறங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்த ஜஸ்ப்ரித் பும்ராவின் வேகம்:
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் வேலைப்பளு காரணமாக, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஏற்கனவே மூன்று போட்டிகளிலும் அவர் விளையாடிவிட்டார். இதனால், ஓவல் மைதானத்தில் நடைபெறும் கடைசி போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பந்துவீச்சில் அவரது வேகம் குறைந்து இருப்பதோடு, அணி வெற்றி பெற்ற இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆகாஷ் தீப் முழு உடல் தகுதி பெற்று இருப்பதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
பும்ரா மீது விமர்சனங்கள்:
இங்கிலாந்து தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒட்டுமொத்தமாக 14 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். இதில் 12 விக்கெட்டுகள் முதல் இன்னிங்ஸில் எடுக்கப்பட்டவையாகும். ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய இரண்டாவது இன்னிங்ஸில் இந்த தொடரில் பும்ரா பெரிதும் தாக்கம் ஏற்படுத்தாதது அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதுபோக 140+கிமீ வேகத்தில் தொடர்ந்து பந்து வீசுவதும் பும்ரா தரப்பில் இருந்து குறைந்துள்ளது. இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் கைஃப், டெஸ்ட் போட்டிகளில் இருந்து வேலைப்பளு காரணமாக பும்ரா விரைவில் ஓய்வு பெற வாய்ப்புள்ளது. அவரது உடல் அவரது எதிர்பார்ப்புகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதை நம்மால் பார்க்க முடிகிறது” என தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
பும்ராவிற்கு எதிரான புள்ளி விவரங்கள்:
டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் புள்ளி விவரங்களும் பும்ராவிற்கு எதிராகவே உள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் அவர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானது முதல் இந்திய அணி இதுவரை, 74 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் பும்ரா களமிறங்கிய 47 போட்டிகளில் 20 போட்டிகளில் (43%) மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். அதேநேரம், அவரின்றி களமிறங்கிய 27 டெஸ்ட் போட்டிகளில் 17 போட்டிகளில் (70%) இந்தியா வெற்றி பெற்றுள்ளது. உதாரணமாக, இந்த தொடரில் கூட இதுவரை இந்தியா வெற்றி பெற்ற ஒரே ஒரு போட்டியில் கூட பும்ரா விளையாடாதது குறிப்பிடத்தக்கது.
மாற்று வீரராகும் ஆகாஷ் தீப்?
ஓல்ட் ட்ராஃபர்ட் போட்டி சமனில் முடிந்ததும், இந்திய அணியின் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் அடுத்த போட்டிக்கு முழு உடல்தகுதியுடன் இருப்பதாகவும், பும்ரா களமிறங்கக் கூடும் என்றும் பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்து இருந்தார். ஆனால், தற்போது காயத்தில் இருந்து ஆகாஷ் தீப் முழுமையாக மீண்டு இருப்பதால், அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார் என கூறப்படுகிறது. இவர் தான் இந்திய அணி வெற்றி பெற்ற இரண்டாவது டெஸ்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, பும்ராவிற்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.




















