அதுல ஒரு பைசா கூட கிடைக்கலை.. அமலாக்கத்துறை விசாரணை.. பிரகாஷ்ராஜ் தந்த விளக்கம் என்ன?
சூதாட்ட செயலியில் நடித்தது தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரம் செய்த விவாகரம் தொடர்பாக நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பலருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதில், ரூ.100 கோடி வரை மோசடி நடந்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் பிரகாஷ் ராஜ் இன்று ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை (ED) அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். பல பிரபலங்களுடன் சேர்த்து, சட்டவிரோத சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் நடித்ததாக பிரகாஷ் ராஜ் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விசாரணையின் போது, தான் ஒரு ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் ஒப்பந்தம் செய்திருந்தேன். ஆனால் அதன் செயல்பாடுகள் குறித்து கவலைகள் எழுந்ததால் 2017 ஆம் ஆண்டிலேயே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டேன் என பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைத்தேன். சரியான முறையில் அவர்களது பணியை அமலாக்கத்துறை செய்கிறது. ஒரு குடிமகனாக பதில் அளிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.
2016க்கு பிறகு சூதாட்ட செயலியில் நடிக்கவில்லை. இந்த செயலிகளால் நான் பணம் சம்பாதிக்கவில்லை. இதுவரை எனக்கு எந்த பணமும் கிடைக்கவில்லை என பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். இவைரத் தொடர்ந்து நடிகர்கள் ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட நடிகர்களிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.





















