சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு வரம்பு குறைப்பு.. கலவர பூமியான வங்கதேசம் இயல்புநிலைக்கு திரும்புமா?
வங்கதேச கலவரத்திற்கு காரணமான இடஒதுக்கீட்டின் வரம்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் குறைத்துள்ளது. விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு 30 சதவிகிதத்தில் இருந்து 5ஆக குறைக்கப்பட்டது.
வங்கதேச வரலாற்றில் இதுவரை நடைபெறாத அளவுக்கு ஏற்பட்ட கலவரத்திற்கு காரணமான இடஒதுக்கீட்டின் வரம்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் குறைத்துள்ளது. அரசு வேலைவாய்ப்புகளில் உள்ள இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என தொடங்கிய போராட்டம், மிக மோசமான கலவரமாக மாறியது.
வங்கதேசத்தை திருப்பிப்போட்ட கலவரம்: காவல்துறைக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் 151 பேர் கொல்லப்பட்டனர். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இது மிகப்பெரிய நெருக்கடியாக அமைந்தது. கலவரத்தை கட்டுப்படுத்தி நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கலவர போலீஸ் களமிறக்கப்பட்டனர்.
ஆனால், அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வி அடைய, களத்தில் ராணுவத்தினர் இறக்கப்பட்டனர். இதற்கிடையே, கடந்த வியாழக்கிழமை முதல் வங்கசேசத்தில் இணைய சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டது. இதனால், வங்கதேசத்திற்கும் வெளி உலகுக்கும் இடையேயான தகவல் பரிமாற்றம் வெகுவாக குறைந்தது.
வங்கதேச அரசு வேலைவாய்ப்புகளில் மொத்தம் 56 சதவிகிதம் இடஒதுக்கீடு அமலில் இருந்தது. கடந்த 1971ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலை போரில் ஈடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டுடன் சேர்த்து மற்ற இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2018ஆம் ஆண்டு, இடஒதுக்கீட்டை ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு ரத்து செய்தது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன? ஆனால், இடஒதுக்கீட்டை ரத்து செய்தது செல்லாது என கடந்த மாதம் கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுதான் கலவரத்திற்கு காரணமாக அமைந்தது. கீழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் வழங்கப்படவிருந்தது. ஆனால், மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்த காரணத்தால் வழக்கின் தீர்ப்பை முன்கூட்டியே வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். அந்த வகையில், இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வந்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவு செல்லாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மொத்த இடஒதுக்கீடு வரம்பையும் 7 சதவிகிதமாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பழங்குடி சமூகத்திற்கு ஒரு சதவிகிதமும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு ஒரு சதவிகித ஒடஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 93 சதவீத அரசு பதவிகள் தகுதி அடிப்படையில் முடிவு செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.