Kavin Murder : 'பட்டியலினத்தவர் என்றால் கொலை செய்வீர்களா?’ கவினின் உறவினர்கள் ஆவேசம்..!
'பெண்ணின் பெற்றோர்களை கைது செய்வதுடன் அவர்கள் இருவரையும் காவல்துறை பணியில் இருந்து நீக்க வேண்டும்’

காதல் விவகாரத்தில் ஐ.டி இளைஞர் கவின் என்பவர் நெல்லையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே மீண்டும் ஒரு உலுக்கு, உலுக்கியிருக்கிறது. தன்னுடைய சகோதரியை, பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் காதலிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத பெண்ணின் தம்பி, அவரை திட்டமிட்டு அழைத்துச் சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கிறார்.
நடந்தது என்ன ?
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்தவர் கவின். வயது வெறும் 25. தந்தை விவசாயி, தாய் அரசு பள்ளி ஆசிரியை. சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த கவின், சம்பவத்தன்று தன்னுடைய தாத்தாவை நெல்லை கே.டி.சி நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த கவின் காதலிக்கும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித், தனியாக பேச வேண்டும் என்று கூறி, கவினை பைக்கில் ஏற்றிக்கொண்டுச் சென்று மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு இடத்தில் இறக்கிவிட்டு, தான் கொண்டுவந்த ஆயுதத்தால் கவினை கொடூரமாக ஓட, ஓட வெட்டி கொலை செய்திருக்கிறார்.
கொலை செய்த சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவருமே காவல் அதிகாரிகள். மணிமுத்தாறு பெடாலியன் போலீஸ் படையில் உதவி காவல் ஆய்வாளராக இருப்பவர்கள். எப்படி இருந்தாலும் தன்னுடைய பெற்றோர்கள் தன்னை காப்பாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில், சுர்ஜித் தன்னுடைய அக்கா காதலிக்கும் நபராக இருந்தாலும் கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் வெறித்தனமாக அவரை வெட்டிச் சாய்த்திருகிறார்.
பட்டியலினத்தவரை காதலிக்க எதிர்ப்பு
கவினும் பாளையங்கோட்டையை சேர்ந்த அந்த பெண்ணும் பள்ளிக் காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். கல்லூரி படிப்பு முடிந்து கவினின் காதலியான அந்த பெண் சித்த மருத்துவராக பணியாற்றி வந்த நிலையிலும் அவர்களது காதல் தொடர்ந்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் கவின் பட்டியலினத்தவர் என்பதை அறிந்த அந்த பெண்ணின் பெற்றோரும் அவரது தம்பியும் இது நமக்கு ஒத்துவராது, நமது உறவினர்களுக்கு இந்த விவகாரம் தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று அந்த பெண்ணிடம் கூறி காதலை கைவிட வைத்துள்ளனர். ஆனால், கவினோ தான் காதலித்த பெண்ணை மறக்க முடியாமல், தொடர்ந்து அவரை காதலிக்கச் சொல்லியும் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்றும் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
அக்காவிற்கு தொல்லையா தருகிறாய் ? முடித்துக் கட்டிய சுர்ஜித்
இந்நிலையில், தன்னுடைய சகோதரி காதலிக்க மறுத்தும், தொடர்ந்து அவரை கவின் வற்புறுத்தி வருவதாக நினைத்து, அந்த பெண்ணின் தம்பியான சுர்ஜித் அவரை திட்டமிட்டு அழைத்துச் சென்று கதற, கதற கொலை செய்துள்ளார். அதுமட்டுமின்றி, கவினை கொலை செய்த கையோடு, நான் தான் அவரை கொலை செய்தேன் என்று காவல் நிலையத்திலும் சுர்ஜித் சரணடைந்துள்ளார்.
கவினின் பெற்றோர்கள் கதறல்
கவின் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து தூத்துக்குடியில் அவரது பெற்றோர்களும் உறவினர்களும் திரண்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறனர். ’பட்டியலினத்தவர் காதலித்தால் உடனே கொன்றுவிடுவீர்களா?’ என்று கேட்டு கதறி அழுது வருவது பார்ப்பவர்களையும் கண் கலங்க வைத்துள்ளது. கவினின் பெற்றோர்களையும் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையில் இருந்து அவர்களை நீக்க வேண்டும் என்றும் கவினின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





















