முதல்வர் மாவட்டத்திற்குள் வரமுடியாது; அனல் பறக்கும் போராட்ட களம்.. கைதாகும் பாமகவினர்
29 ஆம் தேதி இடஒதுக்கீடு போராட்ட தியாகிகள் மணி மண்டபம் திறக்க விழுப்புரம் வருகை தரும் முதல்வருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்போம் என பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சர்ச்சையான முதலமைச்சர் பேச்சு:
சென்னை எழில் நகரில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் அதானி தமிழ்நாட்டோடு ஒப்பந்தம் என்று வெளியான தகவல் குறித்து ராமதாஸ் கேள்வி எழுப்பியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், அதானி விவகாரத்தில் துறையின் அமைச்சரே விளக்கம் அளித்துள்ளார்.
“பாமக நிறுவனர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் அரசுக்கு எதிராக அறிக்கை விட்டுட்டு இருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில் , முதலமைச்சர் ஸ்டாலின், பாமக நிறுவனரான ராமதாசுக்கு பதில் சொல்ல அவசியம் இல்லை என தெரிவித்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள விழுப்புரம் புதுச்சேரி சாலையில் வன்னியர் சங்கம் மற்றும் பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் மறியலில் ஈடுபட வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்ததை அடுத்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை பாமகவினர் முற்றுகையிட்டனர். இதனையடுத்து முற்றுகையிட்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாமகவினரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது தமிழக முதலமைச்சருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள் தமிழக முதலமைச்சர் மன்னிப்பு கோரவில்லை என்றால் 29 ஆம் தேதி இடஒதுக்கீடு போராட்ட தியாகிகள் மணி மண்டபம் திறக்க விழுப்புரம் வருகை தரும் முதல்வருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்போம் என பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ராமதாஸ் அறிக்கை என்ன ?
"இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மின்சார வாரியங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ரூ.2100 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதை மறைத்து, அமெரிக்காவில் முதலீடு திரட்டியது தொடர்பாக அதானி குழும நிறுவனங்கள் மீதும், அவற்றின் தலைவர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீதும் அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கில் அதானியை கைது செய்ய பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது."
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரிகளுக்கு எவ்வளவு கையூட்டு கொடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் அதில் இடம் பெறவில்லை என்றாலும் கூட கையூட்டு பெற்றதில் தொடர்புடைய நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, கையூட்டு வழங்கப் பட்டதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால கட்டத்தில் தான், அதாவது 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள் அதானி குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்கான ஒப்பந்ததில் தமிழ்நாடு மின்சார வாரியமும், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகமும் கையெழுத்திட்டுள்ளன என பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது.
இட ஒதுக்கீடு போராளிகள் மணிமண்டபம்
விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர் சங்கம் நடத்திய இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது, காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபம் வருகின்ற முதல்வர் ஸ்டாலின் 29 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசுக்கு அழைப்பு அனுப்பப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்து இருந்தார்.
பாமக பலமுறை 10.5 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என முதல்வரிடம் பல வகையில் கோரிக்கை வைத்தும், கண்டுகொள்ளாமல் இருந்து வருவதாக பாமக தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. இட ஒதுக்கீடு பற்றி பேசாமல் மணிமண்டபத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவித்ததால் ராமதாஸ் அப்செட் ஆகி விட்டாராம்.