OPS: தனிக்கட்சி தொடங்குவாரா ஓபிஎஸ்? அதுலயும் இத்தனை சிக்கல் இருக்கா..!
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புதிய கட்சி தொடங்குவதில் ஏராளமான சவால்கள் உள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, தொடர்ந்து தனித்து அரசியல் களத்தில் செயல்பட்டு வரும் நாம் தமிழர், அறிமுக கட்சியாக களமிறங்கியுள்ள நடிகர் விஜய்யின் தவெக என்று வரும் சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய போட்டியாக மாறியுள்ளது.
சறுக்கலில் ஓ.பன்னீர்செல்வம்:
அரசியல் களம் மிக கடுமையான போட்டியாக உள்ள நிலையில், யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு அரசியல்வாதி என்ற நிலைக்கு ஆளாகியுள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி என்று தமிழக மக்களால் நன்கு அறியப்பட்ட அவர் சசிகலாவுடனான மோதல், எடப்பாடியுடனான மோதல், மீண்டும் எடப்பாடியுடன் இணைந்தது, பின்னர் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் எடப்பாடியை விட்டு விலகியது என்று ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தொடர்ந்து சறுக்கலையே சந்தித்து வருகிறார்.

குறிப்பாக, அதிமுக சட்டமன்ற தோல்விக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக மாறியுள்ளது. அதிமுக முழுவதும் எடப்பாடி பழனிசாமி கைக்குச் சென்றுள்ள நிலையில், அதிமுக-வை கைப்பற்றுவோம் என்று கூறிய தினகரன் அதிமுக - பாஜக கூட்டணியில் அமைதியாக இருக்க ஓ.பன்னீர்செல்வத்தால் தாக்கத்தை ஏற்படுத்தவே இயலவில்லை.
தனிக்கட்சி தொடங்குவாரா?
தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியைச் சந்திக்கும் முயற்சியும் தோல்வியில் முடிய, ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தனிக்கட்சி தொடங்குவது என்பதும் எளிதான காரியம் அல்ல. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது.
இத்தனை சவால்களா?
இன்னும் 10 மாதமே உள்ள நிலையில், கட்சியைத் தொடங்கி கட்சியை தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். திமுக, அதிமுக என்ற வலுவான கட்சிகள் இருக்கும்போதும், மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த கட்சிகளாக மாறியுள்ள நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட மற்ற கட்சிகளை கடந்து செல்வாக்கு பெற வேண்டும்.

தேர்தலைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகளின் பெயரை காட்டிலும் அவர்களின் சின்னத்திற்குத்தான் செல்வாக்கு ஆகும். திமுக மற்றும் அதிமுக தமிழ்நாட்டில் கோலோச்சி வருவதற்கு உதயசூரியன் சின்னமும், இரட்டை இலை சின்னமுமே காரணம் ஆகும். அதுபோன்று மக்கள் மத்தியி்ல பிரபலமாக உள்ள சின்னங்களை கடந்து தனது கட்சியின் சின்னத்தை கொண்டு செல்ல வேண்டும்.
யாருடன் கூட்டணி?
இன்றைய அரசியலில் சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம் ஆகும். புதியதாக கட்சி தொடங்கி அதற்காக ஏராளமான சமூக வலைதள கணக்குகளை தொடங்கி, தாங்கள் எதிர்க்கும் கட்சிகளை விமர்சித்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம் கட்சி தொடங்கி அந்த கட்சி அவரை தமிழ்நாட்டிற்கு அடையாளம் காட்டிய அதிமுக-விற்கு எதிரான கட்சியுடன் கூட்டணி அமைத்தால், அதிமுக-விற்கு எதிராகவே போட்டியிடுகிறார் என்ற விமர்சனத்தை அவர் எதிர்கொள்ள நேரிடும். இதுபோன்ற எண்ணற்ற சவால்களை தேர்தல் நடைபெற உள்ள 10 மாதங்களிலே ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க நேரிடும். ஒருவேளை கட்சி தொடங்கி அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய அவர் திட்டமிட்டாலும், அவரை எடப்பாடி பழனிசாமி சேர்த்துக் கொள்வாரா? என்பது மிகப்பெரிய கேள்வியாகும்.
இதுபோன்ற பல்வேறு சவால்கள் ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்குவதில் உள்ளது. இதனால், தனது அரசியல் எதிர்காலத்திற்காக அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்றே அவரது ஆதரவாளர்கள் காத்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















