திருச்சி அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், பெரிய மிளகுபாறையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி 7.5.2022 அன்று சட்டப்பேரவை 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு மக்களின் சுகாதார தேவைகளை மென்மேலும் மேம்படுத்திடும் விதத்தில் தமிழ்நாட்டில் கிராமப்புரங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களை இருப்பதைப் போல நகர்ப்புறங்களில் மக்கள் அரசுப் பொது மருத்துவமனையை நோக்கி வரும்போது மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகி வருகிறது.
இந்நிலையை மாற்றி, ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கிடும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிப் பகுதிகளில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் புதிதாக அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி முதற்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 125 கோடி ரூபாய் செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 6.6.2023 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம், பெரிய மிளகுபாறையில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, நலவாழ்வு மையத்தின் பதிவேடுகளை ஆய்வு செய்து, அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்து. மருத்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர், அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலவாழ்வு மையத்தின் சிகிச்சை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் கர்ப்பகால மற்றும் பிரசவகால சேவைகள், சிசு மற்றும் குழந்தைகள் நல சேவைகள். குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கான சேவைகள், குடும்பநலம், கருத்தடை மற்றும் பேறுகால சேவைகள், தேசிய சுகாதாரத் திட்டங்களின் பொதுவான தொற்றுநோய்களுக்கான சிகிச்சைகள், வெளிநோயாளிகள் மற்றும் சிறுநோய்களுக்கு சிகிச்சைகள், தொற்றா நோய்களுக்கான சிகிச்சை அளித்தல், மனநோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல், கண், காது, மூக்கு மற்றும் தொண்டை பிரச்சனைக்கு சிகிச்சை அளித்தல், பல் நோய்களுக்கான சிகிச்சை அளித்தல், முதியோருக்கு சிகிச்சை அளித்தல், விபத்து மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை போன்ற சிகிச்சை வசதிகள் அளிக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
மேலும் திருச்சியில் உள்ள 1832 படுக்கை வசதிகள் கொண்ட அரசு பொது மருத்துவமனைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர். மகப்பேறு பிரிவிற்கு சென்று அங்குள்ள தாய்மார்களிடம் சிகிச்சை விவரங்களையும், மருத்துவமனையில் தினந்தோறும் அளிக்கப்பட்டு வரும் உணவு சரியான நேரத்திற்கு வழங்கப்பட்டு வருகிறதா என்று கேட்டறிந்தார்.
தொடர்ந்து, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் கூடத்திற்கு நேரில் சென்று அங்கு தயாரிக்கப்பட்டு வரும் உணவினை சாப்பிட்டு பார்த்து, தரத்தினை ஆய்வு செய்தார். பின்னர், நோயாளிகளுக்கு தயாரிக்கப்படும் உணவுகளின் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகளின்போது, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மா. பிரதீப் குமார். இ.ஆ.ப., திருச்சிராப்பள்ளி அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர் நேரு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

