Vijay Meets Rahul : ‘காங்கிரஸ் – த.வெ.க கூட்டணிக்கு அச்சாரம்’ ராகுலை சந்திக்கும் விஜய்..?
’விக்கிரவாண்டியில் நடைபெற்ற விஜயின் முதல் மாநாட்டிலேயே ராகுல்காந்தியை பங்கேற்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன’

அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த கட்சி, அந்த கட்சியோடுதான் கூட்டணியில் இருக்கும் என்று அறுதியிட்டு யாராலும் எப்போதும் சொல்ல முடியாது. அப்படி தமிழக அரசியலில் நிகழ்ந்தேறியிருக்கும் நிகழ்வுகள் ஏராளம். இந்நிலையில், வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலும் அப்படிதான் இருக்கப்போகிறதுஇ. இப்போது கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதே கூட்டணியில் தேர்தல் வரை நீடிக்கும் என்று சொல்லிவிட முடியாது. அப்படியான சூழலும் இல்லை.
இந்நிலையில், புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், கூட்டணி ஆட்சி என்று அறிவித்தும் எந்த ஒரு பெரிய கட்சியும் இதுவரை விஜயை நோக்கிச் செல்லவில்லை. பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று மீண்டும் விஜய் தெரிவித்துள்ள நிலையில், அவரது வியூகம் வேறு மாதிரி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்கு கொண்டுவர முயற்சி
திமுக கூட்டணியில் நீண்ட நெடுங்காலமாக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியை தன்னுடைய தலைமையிலான கூட்டணிக்கு கொண்டுவர விஜய் முயன்று வருகிறார். அப்படி காங்கிரஸ் கட்சி தன் தலைமையை ஏற்று கூட்டணிக்கு வந்துவிட்டால் இடதுசாரிகள் உள்பட திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதசார்பற்ற சிறு, சிறு இயக்கங்கள் வரை தமிழக வெற்றிக் கழக தலைமையிலான கூட்டணிக்கு வந்துவிடும் என்று கணக்குப் போட்டுள்ள விஜய் அதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.
ராகுல் காந்தியை சந்திக்க திட்டமிட்டுள்ள விஜய்
அதற்காக, தன்னுடைய நீண்ட கால நண்பரான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தியை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார். விரைவில் டெல்லி சென்று அவர் ராகுல்காந்தியை சந்திக்கவிருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டதாகவும் தமிழக வெற்றிக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் கட்சி தொடங்கிய பிறகு அவர் விக்கிரவாண்டியில் நடத்திய முதல் மாநாட்டிலேயே ராகுல்காந்தியை பங்கேற்க வைக்க முயற்சிகள் நடைபெற்று பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. ஆனால், விஜய்க்கு தொலைபேசியில் வாழ்த்து சொன்ன ராகுல்காந்தி, அவருடைய மாநாட்டு மேடையில் பங்கேற்க மறுத்துவிட்டார். விஜய் தன்னுடைய அரசியலின் மானசீக குருவாக ராகுலாந்தியை ஏற்று செயல்பட்டு வருவதாகவும், அவர் கட்சி தொடங்குவதற்கு 15 வருடங்களுக்கு முன்னரே ராகுல்காந்தியை சென்று சந்தித்தவர் என்பதாலும் இருவருக்கும் இடையே இப்போது வரை நல்ல நட்பு தொடர்கிறது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விரைவில் ராகுல்காந்தியை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான நேரம் ராகுல்காந்தி அலுவலகத்தில் கேட்கப்பட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக மீது காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி
2026 தேர்தலில் திமுக கூட்டணியிலேயே தொடர்ந்தால் அதிக சீட்களை பெற்று வேட்பாளர்களை நிறுத்துவததுடன் மீண்டும் ஆட்சி அமைந்தால் அதில் பங்கு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் சீனியர்கள் டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு கடிதத்திற்கு மேல் கடிதத்தை அனுப்பியிருக்கிறார்கள். அதாவது நிச்சயம் இதற்கு திமுக ஒத்துக்கொள்ளாது என்பதால் அந்த கூட்டணியில் இருந்து வெளிவந்து, ஆட்சியில் பங்கும் கூடுதல் தொகுதிகளையும் கொடுக்கும் கட்சியோடு கூட்டணி வைக்கலாம் என்பதுதான் அவர்களின் கணக்கு.
அதே நேரத்தில் சமீபத்தில் காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசிய கருத்துக்கு வழக்கம்போல் அமைதியாக இல்லாமல் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் உடனடியாக எதிர்வினையை ஆற்றினர். இந்த நெருப்பு கங்கை வைத்து, ஊதி கனலை பெரிதாக்கலாம் என்று தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டு வரும் நிலையில்தான், ராகுல்காந்தியை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.





















