MK Stalin hospitalized : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல்’ மருத்துவமனை அறிக்கையில் இருப்பது என்ன?

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அறிவாலயம் சென்ற நிலையில், அதன்பின்னர் அவர் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன ஆனது என திமுக தொண்டர்களும், பொதுமக்களும் கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில் மருத்துவமனை தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதல்வருக்கு என்ன ஆனது - மருத்துவமனை அறிக்கை
இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய வழக்கமான நடைபயிற்சியை மேற்கொண்டிருந்தபோது லேசான தலைச்சுற்றல் இருந்ததாகவும் அதன் காரணமாக அவர் மருத்துவமனை அழைத்து வரப்பட்டு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும், அவருக்கு தேவையான முதற்கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டுவிட்டதாகவும் அவர் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது.
விரைவில் டிஸ்சார்ஜ்
சாதாரண தலைச் சுற்றலாக இருந்தாலும் அவர் தமிழ்நாட்டின் முதல்வர் என்பதால் அவருடைய உடல்நலனில் கூடுதல் கவனம் எடுத்து அதிகாரிகளும் மருத்துவர்களும் முதல்வருக்கு தேவையான பரிசோதனைகளை செய்யச் சொல்லி அறிவுறுத்தியுள்ளதாகவும், பரிசோதனைகள் முடிந்த பின்னர் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், முதல்வரை சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவரது சுற்றுப்பயணம் உள்ளிட்ட திட்டங்களை தற்காலிகமாக தள்ளிவைக்க பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)






















